பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 ⚫ போதி மாதவன்

கருக்கள் அல்லது விதைகள் அடங்கிக்கிடக்கின்றன. அவைகள் பக்குவமடைந்து பரிணமிக்கும்போது (ஸம்ஸ்காரங்களாகிய) செய்கைகள் எழுகின்றன. இச்செய்கை களின் தொழிலால் ஆரம்ப நிலைவிலுள்ள உணவு செயற்பட ஆரம்பிக்கின்றது. உணர்வைத் துணைக் கொண்டு உருவமும் குணமும் (தனி ஜீவன்கள்–நாம ரூபங்களாகிய அருவுருக்கள்) அமைகின்றன. அருவுருக்களிலிருந்து ஆறு களன்களாக விளங்கும் மனமும் ஐம்பொறிகளும் தொழிற்பட ஆரம்பிக்கின்றன. இந்த ஆறு வாயில்களும் (ஞானேந்திரியங்களும்) வெளிப் பொருள்களோடு தொடர்பு கொள்ளும்போது ஸ்பரிசம் அல்லது ஊறு ஏற்படுகின்றது. ஊறு காரணமாக, எல்லா நுகர்வுகளும் உண்டாகின்றன. காய்ந்த புல்லில் கனல் பற்றுவதுபோல், நுகர்வு தனிவாழ்வில் ஆசை கொள்ளும்படி வேட்கையை எழுப்புகின்றது. வேட்கையிலிருந்து, பொருள்களையும் வாழ்வையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற பற்று உண்டாகின்றது. இது சிறு நெருப்புப் பொறி காட்டையே பற்றிக் கொள்வது போன்றது. இந்தப் பற்றினால் ‘நான்’ என்னும் தனி உணர்ச்சி–அகங்காரம்–தோன்றி வளர்ந்து, பிறப்புக்கு மூலமாயுள்ள பவம் என்னும் கருமக் கூட்டம் விளைகின்றது. பவத்திலிருந்து பிறப்பு (திரும்பத் திரும்ப எடுக்கும் பிறவி) உண்டாகின்றது. பிறவி தோறும் ‘நான்’ என்ற அகங்காரமும் தொடர்ந்து நிலைக்கின்றது. பிறப்பினால் மீண்டும் (மீண்டும் பிறவி யெடுப்பதால்) துக்கம், முதுமை, பிணி, மரணம் ஆகிய வினைப்பயன்கள் விளைகின்றன. துக்கத்தின் பரம்பரை இதுவேயாகும்.

துக்கத்திற்கெல்லாம் மூல காரணம் முதலிலேயே அமைந்துள்ளது. ஜீவனின் தோற்றத்திற்குக் காரணமான பேதைமையிலேயே துக்க காரணம் மறைந்திருக்கினறது. அப்பேதைமையை நீக்குவது எங்ஙனம்?