பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 ⚫ போதி மாதவன்

செய்த உதவிகளையும், அவர்கள் நோற்ற கடுமையான நோன்புகள் பயனற்றுப் போவதையும் எண்ணினார். அவர் உள்ளத்தில் அவர்கள் மீது கருணையே நிறைந்திருந்தது. எனவே அவர் காசியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

போதிமரத்திலிருந்து கயை நகருக்குச் செல்லும் பாதையில் உபாகர் என்ற ஆஜீவக சமயத் துறவி[1] அவரைச் சந்தித்தார். உபாகர் வாலிபர்; வேதியர்; புத்தருக்கு அவர் முன்பு தெரிந்தவர். அவர் புத்தரின் முகத்தில் பொலிந்த தேசையும்[2] அமைதியையும் கண்டு, ‘நண்பரே, உமது தோற்றம் சாந்தி நிறைந்திருக்கின்றது. பரிசுத்தமும் பேரின்பமும் பெற்ற மகா புருடர்களின் கண்களைப் போல, உமது கண்கள் சுடர் விடுகின்றனவே!’ என்று கூறினார்.

புத்த பகவர், ‘நான் அகங்காரத்தை அழித்து விடுதலை அடைந்துள்ளேன். எனது உடல் புனிதமாகி யுள்ளது. எனது உள்ளம் ஆசையற்றுள்ளது. எனது இதயத்தில் உண்மை உறைந்துள்ளது. நான் நிருவாண முக்தியைப் பெற்றுள்ளேன். அதனால் தான் என் தோற்றம். சாந்தி நிறைந்திருக்கின்றது; என் கண்கள் பிரகாசிக்கின்றன. இப்போது பூமியிலே எனது சத்திய இராஜ்யத்தை அமைக்க விரும்புகிறேன். இருளால் சூழப்பட்டவர்களுக்கு ஒளியளித்து, மக்களுக்கு நித்திய வாழ்வின் வாயிலைத் திறந்து வைக்க விரும்புகிறேன்! என்று பதிலுரைத்தார்.

‘அப்படியானானால் நீர் - உலகத்தை வென்ற சினேந்திரர் என்றே உம்மைக் கருதுகிறீரா!’ என்று கேட்டார் உபாகர்.


  1. உபாகர் ஜைனர் என்றும் கூறுவர்.
  2. தேசு - ஒளி