பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 179

பிறகு, உடலை வருத்திக் கொடுமையான தவங்கன் செய்யாமலும், உடலின் இன்பங்களில் ஆழ்ந்திராமலும், முக்தியடைவதற்குரிய நடுநிலை வழியைத் தாம் கண்டு கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

மனிதன் மயக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றும், மீன், புலால் முதலிய உணவுகளை விலக்குவதாலோ, அம்மணமாக அலைவதாலோ, தலையை மழிப்பதாலோ, சடை வளர்ப்பதாலோ, உடலில் அசுத்தமான பொருளைப் பூசிக்கொள்வதாலோ, அக்கினிக்கு ஆகுதிகள் செய்வதாலோ அவன் பரிசுத்தமாகி விட முடியாது என்றும் அவர் பல நீதிகளை விளக்கிச் சொல்லி விட்டுத் தாம் மெய்யறிவு பெற்றுக் கண்டுள்ள ‘மத்திம வழி’யாகிய தரும மார்க்கத்தை அவர்களுக்கு உபதேசம் செய்யப் போவதாக உரைத்தார்.

தரும சக்கரப் பிரவர்த்தனம்

ஐந்து சீடர்களும் அமைதியோடு ஆயத்தமாக அமர்ந்திருந்தனர். தேவர்களும், நாகர்களும் உருக் கரந்து வந்து, மான் சோலையிலே மறைந்து நின்று, செவி மடுத்துக் கொண்டிருந்தனர். பூதல மக்கள் செய்த புண்ணிய வசத்தால் புத்தர் திருவாய் மலர்ந்து போதிக்கலானார் :

‘ஓ பிக்குக்களே! அமிதமான இரண்டு வழிகள் இருக்கின்றன; உலகப் பற்றை விட்டவன் அவை களைப் பின்பற்றலாகாது. உணர்ச்சி காரணமாகவும், முக்கியமாகப் புலனுணர்ச்சி காரணமாகவும், விரும்புதற்குரிய பொருள்களால் திருப்தியடையும் இழிவான பாமர வழி ஒரு பக்கத்தில் இருக்கின்றது–அது வழக்கமாக இருந்துவரினும் தகுதியற்றது; பயனற்றது; உலகப் பற்றுள்ளவர்-