பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்தரின் அவதாரம் ⚫ 17

வாரென்பதைக் குறித்தது. பூமியதிர்ச்சிகளும் பிறவும் பூரண ஞானம் பெற்ற புத்தர் பெருமான், உலகைத் துன்புறுத்தி வந்த தீமைகள், பாவங்களையெல்லாம் சிதறடித்து, எல்லா மக்களையும் நிருவாண இன்பத்திற்கு அழைத்துச் செல்வாரென்பதை அறிவுறுத்தின. ஆறுகள் வந்தவழியே திரும்பிச் சென்றமை, அதுகாறும் மக்கள் இறந்திடப் பிறந்தும், பிறந்திட இறந்தும், ஜனன–மரணச் சுழலிலிருந்து தப்பமுடியாமல் அதிலேயே சிக்கியுழல்வதை மாற்றி, புத்தர் பிறப்பறுத்துப் பெரு வாழ்வடையும் மார்க்கத்தைக் காட்டுவாரென்பதைக் காட்டியது.

இந்நிலையில், மாநிலத்தின் மணிவிளக்கைத் திரு வயிற்றில் மைந்தனாகக் கொண்டிருந்த மாயாதேவி அன்றிரவு அழகியதோர் கனவு கண்டாள். ஆறு தந்தங்களுள்ள வெள்ளை யானை ஒன்று வானத்திலிருந்து இழிந்து, மாணிக்கம்போன்ற செவ்வொளியுள்ள தாரகையாக வலப்புறம் வந்து தன் விலாப் பக்கமாக வயிற்றினுள் புகுந்ததாக அக்கனவில் தோன்றிற்று. மறுநாள் காலையில் அவள் மன்னரிடம் தன் கனவைக் கூறி, ‘அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியைப்போல் வாழ்வில் என்றுமே கண்டிலேன்!’ என்றாள்.

மன்னர், மாமறையோர் சிலரை அழைத்து, அக் கனவின் கருத்தை விளக்கும்படி வேண்டினார். அவர்கள் அத்தகைய கனவுகளைப்பற்றி விவரித்துக் கூறினார்கள். சூரியன் தன் விலாப்புறம் நுழைவதாகத் தாய் கனவு கண்டால், சக்கரவர்த்தியாகத் திகழக்கூடிய மைந்தனைப் பெறுவாளென்றும், சந்திரன் அவ்வண்ணம் நுழைவதாகக் கண்டால், மைந்தன் மன்னர்களில் முதல்வனாக விளங்குவானென்றும், வெள்ளை யானை புகுவதாகக் கண்டால், உலகையும் மக்களையும் துக்கக் கடலிலிருந்து கரையேற்றும் மா நிலத்தின் தனி நாயகமான புதல்வனை அத்தாய் பெறு-