பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188 ⚫ போதி மாதவன்

உள்ளமே அதன் நுகத்தடி; ஆனந்தமே அதன் அச்சு; சக்தியே அதன் சக்கரங்கள்; உள்ள நிறைவும் அமைதியுமே இழுத்துச் செல்லும் குதிரைகள்; கருத்துடைமையே கவனமுள்ள சாரதி; அவாவின்மையே இரதத்தின் அலங் காரங்கள்; ‘ பற்றற்ற உள்ளத்தில் விளையும் அன்பும் அஹிம்சையுமே பாதுகாப்புக்கான ஆயுதங்கள். பொறுமையே தருமத்தின் கவசம். சாந்தி நிலையத்தை நாடி இரதம் உருண்டு ஓடுகின்றது, அந்த இரதம் ஒருவர் தாமே தமக்காகச் செய்து கொள்வது–அதற்கு ஈடும் இல்லை; எடுப்பும் இல்லை. அதிலே அமர்ந்து கொண்டு முனிவர்கள் உலகை விட்டுச் செல்லுகிறார்கள்; உண்மையிலேயே அவர்கள் குறித்த வெற்றியை அடைகிறார்கள்.[1]

தரும இரதத்திலே செல்வோர்க்கு வழிகாட்டும் சோதி நற்காட்சி என்ற நல்லறிவு; நல்லூற்றமென்ற நல்ல சிந்தனையே வழிகாட்டி; வழியிலே தங்கும் இடம் நல் வாய்மை; நற்செய்கை அவர் நிமிர்ந்து நிற்க வலிமை யளிக்கும்; - நல்வாழ்க்கையில் நியாயமான தொழிலைச் செய்து தேடும் பொருள்களே வழிக்கு உணவாம்; நல்லூக்கமே அவர் நடை; நற்கடைப்பிடியாகிய நினைவோடு கூடிய சிந்தனைகளே அவருடைய மூச்சு; நல்லமைதி தியானத்தால் வரும் சாந்தி–அவர் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து செல்லும்.[2]

மற்ற உபதேசங்கள்

அற ஆழியை உருட்டிப் புத்தர் பெருமான் செய்த முதல் உபதேசம் ஆணித்தரமான ஒரு சொற்பொழிவு. உலக சரித்திரத்தில் முக்தி மார்க்கத்திற்கு இது போன்ற


  1. ‘சம்யுக்த நிகாயம்’.
  2. அசுவகோஷரின் ‘புத்த சரிதை’.