பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 189

எளிமையுள்ள ஒரு திட்டம் கூறப்பட்டதில்லை என்றும், ஆன்மா என்ற ஒன்றைக் குறிப்பிடாமலும், அதை மறுத்தும், மனித இயல்புக்கு மேற்பட்ட எதிலும் நம் பிக்கை வைக்காமலும், இறை நம்பிக்கையையும் எதிர் கால சுவர்க்கத்தையும் மறுத்தும், அத்திட்டம் ஆரம்பம் செய்யப்பெற்றது என்றும் பல பௌத்த நூல்களின் புகழ் பெற்ற ஆசிரியரான அறிஞர் ரைஸ் டேவிட்ஸ் ஆச்சரியப் பட்டிருக்கிறார்.[1]

புத்தர் பெருமானின் போதனையை ஒருவர் ஏற்றுக் கொள்ளலோ, எதிர்த்தலோ வேறு விஷயம். ஆனால் அவருடைய உபதேசம் உலகம் தோன்றிய நாள் முதல் அன்று வரை சமய வாழ்க்கையில் மனிதன் சென்று கொண்டிருந்த பாதையை நேர்மாறாகத் திருப்புவதாக அமைந்திருந்தது வியக்கத்தகுந்த விஷயமாகும். எண்ணி லடங்காத சாத்திரங்கள்; எண்ணிலடங்காத தத்துவங் கள் நிறைந்திருந்த நாட்டிலே, அவைகளை எல்லாம் ஐயம் திரிபு அறக் கற்றுணர்ந்து, தாமாகச் சிந்தனை செய்த ஒரு மனிதர் கூறிய அறமே அது! அவரை எதிர்த்து நின்ற பெருங் கூட்டத்தை அவர் அறிவார். ஆயினும், சிறிதும் துளங்காமல் சிறிதும் அஞ்சாமல், அவர் தாம் கண்ட மெய்ப்பொருளை உலகுக்கு அறிவித்து விட்டார்!

உள்ளத்தைப் புனிதமாக்கிக் கொண்டு, உண்மையை உணர்ந்து, இந்தப் பிறவியிலேயே, இவ் உலகிலேயே மனிதன் தானாக முக்தி பெற முடியும் என்று அவர் போதித்தார். ‘இனியேது எமக்கு உன்னருள் வருமோ?’ என்று மனிதன் இரங்கி ஏங்க வேண்டியதில்லை! இடை விடாத தற்பயிற்சியால் இதயம் மாற வேண்டும்; தன்-


  1. தரும சக்கரப் பிரவர்த்தன சூத்திர'த்திற்கு அவர் எழுதியுள்ள முகவுரை பார்க்கவும். (Sacred Books of the East, Vol. XI.)