பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 195

சங்கம்

மான்சோலையிலே இருந்துகொண்டு புத்தர் அங்கு வந்தோர் அனைவருக்கும் தமது சித்தாந்தத்தை உபதேசம் செய்து வந்தார். நாள்தோறும் ஆண்களும், பெண்களும் அதிகமாக வந்து உபதேசம் கேட்டுச் சென்றனர்.

‘பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை’[1]

மக்கள் உள்ளத்தைக் கவர்ந்து வந்தது.

கோபம், குடி, மூடப் பிடிவாதம், துவேஷம், ஏமாற்று, பொறாமை, தற்புகழ்ச்சி, பிறரைப் பழித்தல், இறுமாப்பு, தீய சிந்தனைகள் ஆகியவையெல்லாம் மனிதனின் பரிசுத்தத்தைக் கெடுக்கின்றன என்று காட்டி’ அவர் நல்லொழுக்கத்தை விளக்கிக் கூறினார். தீவினைகள் இவை, நல்வினைகள் இவை என்று பிரித்துக் காட்டி, அவற்றால் உள்ளத்திற்கு ஏற்படும் நன்மை தீமைகளை எடுத்துரைத்தார். உலக வாழ்வின் போகங்களில் ஆழ்ந்துகொண்டு ஒருவன் துன்பக்கடலைத் தாண்ட முடியாது என்பதை, ‘ஒருவன் தன் விளக்கில் தண்ணீரை ஊற்றி நிரப்பினால், இருளை நீக்கமுடியாது. உளுத்துப் போன கட்டையைக் கொண்டு தீக்கடைந்து நெருப்பை உண்டாக்க முடியாது!’ என்ற உபமானத்தின் மூலம் அவர் விளக்கினார்.

உலக வாழ்விலே உடலின் தேவைக்குத் தக்கபடி உண்ண வும் பருகவும் வேண்டியது அவசியம் என்றும், அவை பாவமல்ல என்றும், உடலைப் பாதுகாப்பது


  1. ‘மணிமேகலை’