பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200 ⚫ போதி மாதவன்

தோடு இருந்தனன். அவனுக்குப் பக்குவம் வந்துவிட்டது என்பதை அறிந்த அண்ணலும், ‘சங்கத்தில் சேர்ந்து, ததாகதரைப் பின்பற்றுவாயாக!’ என்றார். என்றாலுமே, யசனுடைய அணிகளும் உடைகளும் மாறி, அவன் காவி யுடையுடன், கனிந்த பிக்குவாகத் தோன்றினான்.

மருளுடைய மக்களின் மனமாசு கழுவும் மருத்துவரான புத்தர் பிரான் பின்னால் யசனைத் தேடிவந்த அவன் தந்தைக்கும் உபதேசம் செய்து, அவர்களுடைய அரண்மனைக்குச் சென்று, யசனுடைய மனைவியையும், அன்னையையும் தருமத்தை மேற்கொள்ளச் செய்தார். யசனுடைய தந்தை இல்லறத்தில் இருந்துகொண்டே தருமத்தை ஏற்றார். இல்வாழ்வில் இருந்து கொண்டே பௌத்த தருமத்தை மேற்கொண்ட முதற் பெண்டிர் அவர் மனைவியும், மருமகளுமே. பிறகு யசனுடைய நண்பர்கள் ஐம்பத்து நால்வர், அவன் முண்டிதமாகித் துறவு பூண்டதை அறிந்து, தாங்களும் புத்தம், தருமம், சங்கத்திடம் அடைக்கலம் புகுந்தனர்.

தருமப் பிரசாரர்கள்

நாள்தோறும் அறம் கேட்க வந்தவர்களின் தொகை பெருகிக்கொண்டிருந்தது. மக்களுக்கு உபதேசம் செய்ய வும், துறவிகளைச் சங்கத்தில் சேர்க்கவும் பிக்குக்களை வெளியே அனுப்ப வேண்டிய காலம் வந்து விட்டதைத் ததாகதர் உணர்ந்தார். அப்போது அறுபத்தொரு அருத்துக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். அவர் அவர்களைப் பார்த்துக் கூறியதாவது:

‘சோதரர்களே! நான் சகல பந்தங்களிலிருந்தும் விடுதலை பெற்றுள்ளேன், மானிட இயல்புக்கு மேற்பட்ட பந்தயங்கள், மானிட பந்தயங்கள் யாவற்றிலிருந்தும் விடுதலையடைந்துள்ளேன். சகோதரர்களோ, நீங்களும், அமானுஷ்ய