பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202 ⚫ போதி மாதவன்

என்றார். அத்தகையோர், மார்க்கத்தை ஏளனம் செய்து வெறுத்துக் கண்டித்து, இழிவுபடுத்தக் கூடும் என்று எச்சரிக்கை செய்தார். அதுவரை தாமே துறவிகளுக்குத் தீக்கை அளித்து வந்ததுபோல், அவர்களே மேற்கொண்டு சங்கத்தில் சேரும் துறவிகளுக்குத் தீக்கை அளிக்கவம் அனுமதி அளித்தார்.

உடைகள், பாதரட்சைகள், உணவு முதலிய ஒவ்வொரு விஷயம் பற்றியும் பிக்குக்களுக்குக் கண்டிப்பான விதிகள் அமைத்து, அவைகளை அவர்கள் நன்கு உணர்ந்துகொள்ளும்படி செய்யப் பெற்றது.

அக்காலம் முதல் பிக்குக்கள் நாடெங்கும் சுற்றி அறவுரை புகன்று, மாரிக்காலத்தில் திரும்பி வந்து மூன்று மாதங்கள் மட்டும் ததாகதருடன் தங்கியிருந்து உபதேசம் கேட்பது வழக்கமாயிற்று.

சாரதாத்

ஞானாசிரியரான புத்தர் இஸிபதனம் என்று பெயர் பெற்ற சாரநாத்திலிருந்து முதன் முதல் தரும சக்கரப் பிரவர்த்தனம் செய்ததால், அந்த இடம் பௌத்தர் களுக்கும் உலகுக்குமே முக்கியமான தலமாகிவிட்டது. பிற்காலத்தில், ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குக்கள் தங்கியிருக்கத்தக்க மடாலயங்களும் விகாரையும் அங்கே அமைந்திருந்தன. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அங்குச் சென்று பார்வையிட்ட சீன யாத்திரிகரான பாஹியான் அங்கேயிருந்த இருநூறு அடி உயரமுள்ள விகாரையில் புத்தர் அற ஆழியை, உருட்டுவது போன்ற கற்சிலை ஒன்று இருந்ததாகவும், ஆயிரம் துறவிகள் அங்கே இருந்ததாகவும் குறித்துள்ளார். ஏழாம் நூற்றாண்டில் மற்றொரு சீன யாத்திரிகரான ஹுயன்-சாங்கும் அங்கு விஜயம் செய்து குறிப்பு எழுதியுள்ளார்.