பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதினோராம் இயல்

வேணு வனம்

‘எண்ணிறந்த குணத்தோய் !
யாவர்க்கும் அரியோய் நீ!
உள்நிறைந்த அருளோய் நீ!
உயர்பார நிறைத்தோய் நீ!
மெய்ப்பொருளை அறிந்தோய் நீ!
மெய் அறமிங்(கு) அளித்தோய் நீ!
செப்பரிய தவத்தோய் நீ!
சேர்வார்க்குச் சார்வு நீ!’

–வீரசோழியம்

பொது அறிவை இகழ்ந்து புலமுறு மாதவரான[1] புத்தர் உருவேலா என்ற கயையை அடைய வேண்டும் என்று கங்கையைக் கடந்து சென்றார். அங்கே அக்கினியை வழிபடும் ஜடிலர்கள்[2] என்று அழைக்கப் பெற்ற சடைமுடி தரித்த முனிவர்கள் நூற்றுக்கணக்காக இருந்தனர். அவர்களுடைய தலைவரான அக்கினி காசியபர் அகில பாரதத்திலும் புகழ்பெற்றிருந்த மகரிஷி, ஐந்நூறு சீடர்களோடு அவர் வானப் பிரஸ்தராக இருந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய சகோதரர்களான நதீ காசியபரிடம் முந்நூறு சீடர்களும், கயை காசியபரிடம் இருநூறு சீடர்களும் இருந்தனர். மகா


  1. சாமானிய அறிவைத் தள்ளி மெய்ஞ்ஞானத்தால் விளங்கும் தவ சீலரான.
  2. ஜடிலம்-சடைமுடி.