பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்தரின் அவதாரம் ⚫ 19

தேவதாக நகர்வரை சாலை முழுதும் செம்மையாக்கப்பட்டது. வழியெங்கும் வாசனை நீர் தெளிக்கப்பெற்று, மலர்கள் தூவப்பெற்றன. புனிதவதி மாயாவுக்கு அரண்மனையிலிருந்த நவரத்தினங்களிழைத்த நகைகள் பலவற்றையும் அணிவித்து, மலர் மாலைகள் சூட்டி அலங்கரித்தனர். அவள் ஏறியிருந்த முத்துச் சிவிகையைச் சுற்றி யானைகளும், குதிரைகளும், படையினரும் சூழ்ந்துவர, முன்னும் பின்னும் இசைகள் முழங்க, நடன மாதர்கள் பலர் தொடர்ந்து வர, நகரமே அவளோடு புறப்பட்டுச் செல்வதுபோலிருந்தது.

வழியிலே. தலைநகரிலிருந்து பன்னிரண்டு மைல்களுக்கப்பால் மன்னர்க்குரிய மாமலர்ச் சோலையான உலும்பினி வனத்தைக் கண்டதும், மாயாதேவி அங்கே தங்கி இளைப்பாற விரும்பினாள். அவ்வண்ணமே பல்லக்கு அவ்வனத்துள் கொண்டு செல்லப்பெற்றது. அங்கே கொண்டல்கள் முழங்கவும், குயில்கள் பாடவும், கிளிகள் மழலையரற்றவும், மரங்கள் ‘மலர் மழை பொழியவும், மயில்கள் ஆடவும், கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய காட்சிகள் நிறைந்திருந்தன. எங்கணும் இசை நிரம்பியிருந்தது. மாயா, பணிப்பெண்கள், நடனமாதர்களுடன், தான் விரும்பிய பக்கமெல்லாம் சென்று காட்சிகளைக் கண்ணுற்றுக் களித்துக் கொண்டிருந்தாள். மயிலின் தோகைபோல் இலைகளடர்ந்துள்ள ஒரு பலா மரத்தைக் கண்டு, அதனடியில் சிறிது நேரம் இளைப்பாற எண்ணி நின்றாள். அம்மரத்தின் கிளைகள் ஏதோ மாய சக்தியால் பணிவதுபோலத் தாழ்ந்து தொங்கின. அவள் அக்கிளை களில் ஒன்றைப் பற்றிக்கொண்டு உயரே வானத்தை நிமிர்ந்து பார்த்த காட்சி கார் காலத்திலே வானத்திலே தோன்றும் வானவில் போலிருந்தது.

காலையும், மாலையும் தெரியாத அந்தக் கற்பகச் சோலையிலே, நகைகளும், உடைகளும், மலர்களும்,