பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208 ⚫ போதி மாதவன்

ஆயிரம் துறவிகள் சேர்ந்து விட்டனர். அவர்களுக்கும் காசியப சகோதரர்களுக்கும் அச்சமயத்தில் அவர் அக்கினியை உபமானமாகக் கொண்டே ஓர் அரிய உபதேசம் செய்தார். அது வருமாறு :

‘ஓ பிக்குக்களே! எல்லாப் பொருள்களும் அனல் பற்றி எரிகின்றன. பிக்குக்களே, அனல் பற்றி எரியும் இந்தப் பொருள்கள் யாவை?

‘பிக்குக்களே, கண் பற்றி எரிகின்றது; உருவங்கள் எரிகின்றன; கட்புலனும் எரிகின்றது; கண்ணால் பார்த்த பொருள்களின் கருத்துக்களும் எரிகின்றன; புலன்களின் மூலம் உணரும் நல்லன, தீயன, அல்லாதன ஆகிய எல்லா உணர்வுகளும் எரிகின்றன.

‘எதைப் பற்றிக் கொண்டு இவைகள் எரிகின்றன?

ஆசைத் தீயிலும், துவேஷத் தீயிலும், வெறி கொண்ட பற்றுத் தீயிலும், ஜனனம், முதுமை, மரணம், துக்கம், புலம்பல், துயரம், சோகம், அவநம்பிக்கை ஆகியவற்றால் தோன்றும் தீயிலும் எரிகின்றன.

‘ஆசாபாசங்கள், வெகுளி, பேதைமை, வெறுப்பு முதலியவை இருக்கும் வரை–நெருப்பு தான் பற்றி எரிவதற்குரிய பொருள்கள் இருக்கும் வரை–தீ எரிந்து கொண்டேயிருக்கும் அதனால் ஜனன மரணங்களும், அவைகளைச் சார்ந்த துயரங்களும் நேர்ந்து கொண்டேயிருக்கும்.

‘இவைகளையெல்லாம் சிந்தித்துப் பார்த்துச் சத்திய மார்க்கத்தில் செல்லும் சீடன், நான்கு