பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210 ⚫ போதி மாதவன்

சேனாபதிகள் புடைசூழ, எதிர்கொண்டு சென்று வரவேற்றார். அப்போது போதி நாதர் நகரின் அருகே யிருந்த யஷ்டி வனத்தில் தங்கியிருந்தார். அவரோடு அமர்ந்திருந்த பிக்குக்களிலே பலர் முன் காலத்தில் சடை வளர்த்துக் கொண்டிருந்த ஜடிலர்கள். அவர்களையும், அவர்களுடைய தலைவராக விளங்கிய அக்கினி காசியபரையும் கண்ட சிரேணிய மன்னர் திகைத்து விட்டார். போதிநாதர் காசியபருடைய சீடராகி விட்டாரா, அல்லது காசியபர் அவருடைய சீடராகி விட்டாரா என்று அவர் உள்ளம் திகைத்தது. அதை உணர்ந்த புத்தர் பெருமான், காசியபரை நோக்கித் தாம் பௌத்த தருமத்தை மேற்கொண்டதால் பெற்ற நன்மைகள் என்ன என்று வினவினார். காசியபர், தாம் முன்னால் அக்கினி வணக்கம் செய்து வந்ததில், அகங்காரம் அழியாமல் பிறவிச் சுழலிலேயே சிக்கியிருந்ததாகவும், பௌத்த தருமத்தால் தமக்கு ஞானம் பிறந்து சாந்தி நிறைந்த நிர்வாணத்தை அடையும் மார்க்கம் தெரிந்ததாகவும் கூறினார். அவரைப் போன்ற மகானே போதிநாதரிடம் அடைக்கலம் புகுந்து விட்டதைப் பார்த்துப் பெருமானுடைய ஏற்றத்தை மன்னர் தெளிவாக உணர்ந்து மகிழ்ந்தார். அவரும் பெருமானும் ஒருவரையொருவர் குசலம் விசாரித்து அளவளாவிப் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் புத்தர் பெருமான், அங்குக் கூடியிருந்த கூட்டத்தினர் யாவரும் தமது தருமத்தைக் கேட்டுப் பக்குவ நிலையை அடைந்திருப்பதைக் கண்டு, மதிமுகம் மலர்ந்து மன்னரை நோக்கிக் குயில் போன்ற தமது இசைக் குரலில் உபதேசிக்கலானார்:

‘மனம், சிந்தனைகள், பொறிகள் யாவும் ஜனன மரண விதிக்கு உட்பட்டவை. ஜனன மரணத் துக்கத்தின் காரணத்தை ஒரு முறை