பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேணு வனம் ⚫ 213

அதற்கே ஊழியம் செய்து கொண்டிருப்பவர்களே! . பிறப்பு, முதுமை, பிணி, மரணம் ஆகிய வற்றைப்பற்றி ஓயாது அச்சம் கொண்டவர்களே! “நான்” என்ற கொடிய தலைவன் இல்லை என்ற நற்செய்தியைக் கூறுகிறேன், கேண்மின்!

“நான்” என்பது ஒரு தவறு; ஒரு மயக்கம்; ஒரு கனவு. கண்களைக் திறந்து விழித்து எழுங்கள். விஷயங்களை உள்ளபடியே பாருங்கள். உங்களுக்குச் சாந்தி ஏற்படும்.

‘விழித்திருப்பவன் கனவுகளுக்கு அஞ்ச மாட்டான். கயிற்றைக்கண்டு அரவு என்று கருதியவன், (கயிறு கயிறு தான் என்று) அதன் தன்மையைக் கண்ட பின்பு பயத்தை ஒழித்துவிடுவான். “நான்” இல்லை என்பதைக் கண்டுகொண்டவன் சுய நல ஆசைகள், உணச்சிகளையெல்லாம் துறந்து விடுவான்.

‘பொருள்களில் கொள்ளும் பற்று, பேராசை, புலன்களின் உணர்ச்சி வசப்படுதல் ஆகியவை முற்பிறவிகளிலிருந்து தொடர்ந்து வந்தவை; உலகின் துயரங்களுக்கும் செருக்குக்கும் அவைகளே காரணமானவை.

‘சுயநலத்தால் (பொருள்களில்) கொள்ளும் பற்றை (உபாதானத்தைக் கைவிடுங்கள்; பாவமற்ற, அமைதி நிறைந்த மன நிலையை நீங்கள் அடைவீர்கள்; அதனால் சாந்தியும், நலனும், ஞானமும் பெற முடியும்.

‘இந்த மன நிலையே உலகிலே தலைசிறந்தது. இதுவே நிர்வாணம்!’[1]


  1. ‘ஃபோ-ஷோ-ஷிங்- த்ஸாங்-கிங்’ என்ற சீன நாட்டுப் புத்த சரிதை.