பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216 ⚫ போதி மாதவன்

மன்னரின் நீதி

பிம்பிசாரப் பெருந்தகைபற்றியும், வேணு வனத்தைப் பற்றியும் பல இனிய கதைகள் உண்டு. அவர் பல போர்களில் வெற்றிபெற்ற வெற்றி வீரர். அக்காலத்தில் மக்கள் அவரை மானிட மடங்கல்[1] என்று கருதி வந்தனர். ஆயினும் அவர் அன்பும் பெருந்தன்மையுமுள்ள பேரரசர். அவருடையமகத நாட்டின் பெருமை இந்திய சரித்திரத் திலே பொன் ஏடுகளில் பொறிக்கத்தக்கதாகும். பிற் காலத்தில் பாரதநாடே மகத சாம்ராஜ்யமாக விளங்கிற்று.

மன்னரின் தலைநகரான இராஜகிருகம் குளிர்ச்சியான காவுகளும் சோலைகளும் நிறைந்து எழிலுடன் விளங்கிக் கொண்டிருந்தது. ஒருசமயம் கோதாவரி நதிக்கரையில் ஆண்டுகொண்டிருந்த இராஜஸ்ரீ என்ற மன்னன் அந்நகரைப் பார்வையிடச் சென்றிருந்தான். அங்கு அழகே குடி கொண்டிருந்ததைக் கண்டு அவன் ஆச்சரியமுற்றான். அரண்மனையும் அதைச் சேர்ந்த நந்தவனங்களும் அவனைப் பரவசமாக்கின. ஒருநாள் மாலை அவன் பிம்பிசாரருடன் பிரியமாகப் பேசிக்கொண்டே, அவருடைய உபவனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். தளிர்களும், கொடிகளும், செடிகளும், பூங்கொத்துக்களும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்துக்கொண்டிருந்தன. அப்போது அங்கே ஒரு மூலையில் பண்படுத்தப் பெறாத் மண்மேடு ஒன்று இருந்தது. அதைக்கண்ட விருந்தினனான மன்னன், அதையும் வெட்டித் திருத்தியிருந்தால் சோலையின் அழகு அதிகமாயிருக்கும் என்று கூறினான்.

“அது என்னுடைய இடமன்று!” என்றார் மகத மன்னர், அது ஏழையான ஒரு விதவையின் உடைமை


  1. மடங்கல்- சிங்கம்.