பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 ⚫ போதி மாதவன்

அவருக்கு அரசர்க்கு உரிய உபசாரங்கள் நடப்பது வழக்கம்.

அவருடைய இயற்பெயர் சுதத்தர் என்றிருந்த போதிலும், எல்லோரும் அவரை அநாத பிண்டிகர் என்றே அழைத்து வந்தனர்.[1] அநாதைகளை ஆதரித்து அமுதளித்தும், ஏழைகளுக்கு எண்ணிறந்த உதவிகள் செய்தும், அவர் வரையாது அளிக்கும் வள்ளலாக விளங்கியதால், அவர் வாழ்க்கை முழுவதும் இந்தப் பெயரே நிலைத்திருந்தது. திருமுறைகளிலும் இலக்கியங்களிலும் இப் பெயரே பொறிக்கப் பெற்றுவிட்டது.

அவர் புத்தரை முதல் முறை சந்தித்த விவரம் ‘விநய பிடக'த்தில் அழகாக விவரிக்கப் பெற்றுள்ளது.

அநாத பிண்டிகர் ஒரு சமயம் இராஜகிருகத்திற்குச் சென்றிருக்கையில், அவர் மைத்துனர் மாளிகையில் பணியாளர்களும் அடிமைகளும், ஓய்வொழிவு இல்லாமல், ஓடியும் சாடியும் வேலை செய்து கொண்டிருந்தனர். மைத்துனரான கோடீச்வரர் அவர்களுக்கு ஆணைகளிட்டு, ‘நாளை அதிகாலையில் எல்லோரும் எழுந்திருந்து பக்குவ மான உணவுகளும், கறிகளும், இனிப்புப் பண்டங்களும் விரைவாகத் தயாரிக்க வேண்டும்!’ என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார். அநாத பிண்டிகரை யாரும் கவனித்து வரவேற்கக் கூட முடியவில்லை. அந்த மாளிகையில் திருமணம் ஏதேனும் நடக்கப் போகின்றதோ, அல்லது ஒருவேளை பிம்பிசார மகாராஜருக்கு விருந்து. ஏற்பாடாகின்றதோ என்று அவர் எண்ணினார்.

அவருடைய மைத்துனர் பணியாட்களுக்கு வேண்டிய ஆலோசனைகளையெல்லாம் கூறிவிட்டு, வெகு நேரத்-


  1. இவர் அநாதபிண்டிதா, அநாத பரிபாலகா என்றும் கூறப்படுவர்.