பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அநாத பிண்டிகர் ⚫ 233

இருந்துவிட நேரும் என்றும், சொந்த இயற்கையினாலே ஜீவன்கள் தாமாகத் தோன்றின என்றால், உலகில் ஒவ்வொரு விஷயமும் காரண–காரியத் தொடர்புடன் நிகழ்ந்து வருகையில், அவை மட்டும் காரணமின்றித் தாமாகத் தோன்றின என்று கருதல் தவறு என்றும் பல தத்துவங்கள் பற்றியும் பகவர் விரிவாக எடுத்து விளக்கினார்.

அநாத பிண்டிகரின் அகத்தில் ஞானவிளக்கு நன்கு ஒளிவிட ஆரம்பித்தது. அவர் பௌத்த தருமத்தின் இயல்பை அறிந்து கொண்டார். தூய்மையான வெள்ளைத் துகிலில் சாயம் உடனே பற்றிக் கொள்வது போல், அறவுரை அவர் இதயத்தைப் பற்றிக் கொண்டதாம்! ஆயினும் அவர் அடைய வேண்டிய ஞானம் ஒரு துளி மட்டும் எஞ்சியிருந்ததாயும் அது அவர் பின்னால் புத்தருக்கும் பிக்குக்களுக்கும் விகாரை அமைத்து அர்ப்பணம் செய்யும் போது பூர்த்தியாயிற்று என்றும் நூல்கள் கூறுகின்றன.


‘போதிமூலம் பொருந்திய சிறப்பின்
நாதன்பாதம் நவைகெட ஏத்துதல்
பிறவிதோறும் மறவேன்’

[1]

என்ற முறையில் உறுதி பூண்டு, அநாத பிண்டிகர் அருள் நெறி காக்கும் செல்வரை வணங்கி, புத்த, தரும, சங்கம் என்னும் மும்மைச் சரணங்களையும் மொழிந்து, தம்மை ஏற்றருளுமாறு ஐயனை வேண்டிக் கொண்டார். அவ்வாறே ஐயனும் மனமிசைந்து, அவருக்கு ஆசி கூறினார்.


  1. மணிமேகலை

போ -15