பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அநாத பிண்டிகர் ⚫ 235

புத்தர்' : அத்தகைய இடம் இருந்தால் பிக்குக்கள் வரவும், போகவும், தங்கியிருக்கவும் வசதியாயிருக்கும்.

அநாத பிண்டிகர் : தாங்கள் வர இசைந்தாற் போதும். நானே விகாரையை அமைத்துத் தயாராக வைத்திருப்பேன்![1]

பின்னர் விகாரையின் அமைப்புப் பற்றி புத்தரிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய நுணுக்கமான விஷயங்கயும் அவர் கேட்டுத் தெரிந்து கொண்டார். பகவரும் மனமுவந்து விபரங்களைக் கூறினார். வர்ணச் சித்திரங்கள் எங்கெங்கு எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கினார். விகாரைக்கு வரும் பிணியாளருக்குச் சிகிச்சை செய்யும் அறைக்கு வெளிப்புறத்தில் ததாகதர் நோயாளருக்குத் தொண்டு செய்வது போன்ற சித்திரம் எழுத வேண்டும் என்றும், தாம் வந்து தங்கியிருக்கக் கூடிய ‘கந்தகுடி’ அறையின் முன்புறம், கையில் மாலை ஏந்திய ஓர் இயக்கனுடைய உருவம் எழுத வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அநாத பிண்டிகர், விரைவாக விகாரை கட்டுவதற்குத் தமக்கு ஆலோசனை கூறி உதவி புரிவதற்காக, சாரீபுத்திரரையும் அழைத்துக் கொண்டு செல்ல ஐயனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டார்.

புறப்படுவதற்கு முன்பு, ‘மேற்கொண்டு நான் செல்வங்களை வைத்திருக்க வேண்டுமா, அல்லது நாணம் துறவு பூண வேண்டுமா? தாங்கள் இராஜ்யத்தையும் அரசுரிமையையும் துறந்து உலகுக்கு வழி காட்டியுள்ளீர்களே!’ என்று அவர் பகவரிடம் கேட்டார். பகவர்


  1. இந்த உரையாடல் திபேத்திய ‘துல்வா’ என்ற நூலில் உள்ளது.