பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அநாத பிண்டிகர் ⚫ 237

தமது மைந்தரை ஒருமுறையாவது காணவேண்டும் என்று கருதினார். எனவே, ‘மற்றவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு நலம் பெறுகிறார்கள்; ஆனால், பெற்ற தந்தையும், உற்ற உறவினரும் அந்தப் பாக்கியத்தைப் பெறவில்லை!’ என்ற செய்தியுடன் அவர் உதாயியை இராஜகிருகத்திற்கு அனுப்பி வைத்தார்.

உதாயி புத்தர் பிறந்த அன்றே பிறந்தவன்; அவருடைய இணை பிரியாத் தோழன். ஆகவே, பகவருடைய அறிவுரைகளைக் கேட்டு மனம் மாறிய தூதர்களைப் போல் ஏமாறாமல், அவன் அவ்வுரைகள் தன் செவிகளுள் நுழையாதபடி பஞ்சு வைத்து அடைத்துக் கொண்டு வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஐயனைக் கண்டு, வந்த செய்தியைக் கூறிய பிறகு, அவனும் பிக்குவானான்.

சாலைகளிலும் சோலைகளிலும் மரங்களெல்லாம் வண்ண வண்ண மலர்களோடு ஒளிமயமாகத் திகழ்வதால், அந்த வசந்த காலத்திலேயே கபிலவாஸ்துவுக்குச் செல்ல வேண்டுமென்று அவன் ஐயனுக்கு நினைவுறுத்தினான். அவரும் அவ்வாறே செல்வதற்கு இணங்கினார். உதாயி அண்ணலின் வரவை அறிவிப்பதற்காக முன்னதாகச் சென்றான்.

விடை பெறுதல்

பெருமான் இராஜகிருகத்தை விட்டுப் புறப்படுமுன்பு, பிம்பிசாரர் தமது மைந்தன் அஜாத சத்துரு என்ற இளவரசனையும் அழைத்துக் கொண்டு போய், அவரைத் தரிசித்தார். இளவரசன் பிற்காலத்தில் தனது தந்தைக்கும் புத்தருக்கும், சங்கத்திற்கும் பல கொடுமைகள் செய்ய நேர்ந்தது. அவனுடைய குணத்தை முன்னதாகவே அறிந்து கூறுவது போல், பகவர் அவனுக்குப் பல நீதிகள் புகன்று, தந்திரமும் ஒழுங்கீனமும் எக்காலத்திலும் வெற்றி-