பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240 ⚫ போதி மாதவன்

புத்தர் பெருமான் வருகின்ற தினத்திலே உரோகிணி நதிக்கரையிலிருந்தே ஆடவர், ‘பெண்டிர், குழந்தைகள் யாவரும் ஆயிரக்கணக்கில் அவரைச் சூழ்ந்து வந்து கொண்டிருந்தனர். அவருடைய முகவிலாசத்தையும், அமைதியையும், அருட்பொலிவையும் கண்டு, ‘இப்படியும் ஒரு துறவி இவ்வுலகில் உள்ளாரோ!’ என்று மக்கள் அதிசயித்தனர்.

நியக்குரோத வனத்தை நண்ணி வரும்போது அவரை எதிர்கொண்டு அழைப்பதற்காக அரசர் தேர்மீது அமர்ந்து கொண்டு காத்திருந்தார். அவருடன் அமைச்சர்களும், சேனைத் தலைவர்களும், செல்வச் சீமான்களும் கூடியிருந்தனர். எள்ளும் விழுவதற்கு இடமின்றி ஜனக் கூட்டங்களும் திரள் திரளாகத் திரண்டு நின்றன.

அந்நிலையில், மழுங்கச் சிரைத்த தலைகளுடன் விளங்கிய ஆயிரம் துறவிகளுடன், காஷாயக் கடலின் மீது விளங்கும் செங்கதிர்போல், ஒளிவீசி நடந்து வந்து கொண்டிருந்தார் பெருமான். அவர் தலையும் முண்டித மாயிருந்தது. அவர் உடையும் காவியாகவே இருந்தது. தூரத்திலிருந்து அவரைக் கண்டதும், சுத்தோதனர் தேரிலிருந்து கீழிறங்கினார். விருந்தினர் தமது குமாரரே எனினும், மன்னர்கள் துறவிக்குச் செய்ய வேண்டிய மரியாதையை எண்ணி அவர் நடந்தே சென்றார். பெருமானின் திருக்கோலம் அவர் உள்ளத்தை வேதனை செய்த போதிலும், அவருடைய பேரெழிலைக் கண்டு அவர் அதிசயித்து ஆனந்தமடைந்தார். அவர் ஏதேதோ பேச வேண்டும் என்று முயன்றும், சொற்கள் கிடைக்க வில்லை.

எதிரே, மேருமலை போன்ற அமைதியும், உறுதியும் கொண்டு, சிம்மம் போன்ற ஆண்மையுடன், ஏறுபோன்ற நடையுடன், ஒளிவீசி வந்து கொண்டிருந்த துறவி அவ-