பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242 ⚫ போதி மாதவன்

அடைந்து அவரை வணங்கினார். சாக்கியர் அனைவரும் அரசரைப் பின்பற்றித் தாமும் ததாகதரை வணங்கினர்.

பின்னர் ததாகதர், தாம் முந்திய பிறவிகளில் ஒன்றில் வேசந்தரர் என்ற இளவரசராயிருந்து, யாசிப்பவர்களுக்குக் கேட்டதையெல்லாம் அருளி, முடிவில் தமது மக்களைப் பிரிந்து, அருமை மனைவியையும் ஓர் அந்தணருக்குத் தானம் செய்து விட்டதையும், தேவேந்திரன் தோன்றி, அவரையும் பத்தினியையும் பாராட்டி, அந்த இணை பிரியாக் காதலரை மீண்டும் சேர்த்து வைத்ததையும் விரிவாகக் கூறித் தாம் எக்காலத்திலுமே பரதுக்க துக்கர்[1] என்பதையும், பிற உயிர் ஓம்பும் மன்னுயிர் முதல்வா என்பதையும் எடுத்துக் காட்டினார். ஞானியின் இயல்பு பற்றி அவர் அப்போது நயமான சில உரைகளும் புகன்றார் :

“ஞானி, உலகம் எரிகின்ற நெருப்பால் சூழப்பட்டிருப்பதாகக் கண்டு அச்சமுற்றுப் பிறப்பு, முதுமை, மரணங்களை ஒரேயடியாக ஒழிக்கும் வரை அந்த அச்சத்தைக் கைவிடாமல் இருக்கிறான். ஞானி வாழும் இடம் எல்லையற்ற அமைதி நிறைந்து விளங்குகின்றது. அங்கு ஆயுதங்கள் தேவையில்லை; இரதங்களும், யானைகளும், குதிரைகளும், படைகளும் தேவையில்லை! ஞானியின் ஆசைகள் அடங்கி அவிந்து போகின்றன; வெகுளி அவனிடமிருந்து விலகி ஓடுகின்றது; பேதைமை பிரிந்து ஓடுகின்றது; பரந்த உலகிலே வெல்ல வேண்டியது எதுவும் இல்லை; அவன் துக்கம் என்ன என்பதை அறிந்து, அவன் அதன் மூலத்தையே அறுத்துவிடுகிறான்; பின்னர்


  1. பரதுக்க துக்கர்-பிறருடைய துக்கத்திற்காகத் தாம் வருந்துபவர்.