பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 243

நன்னெறிகளைக் கடைப்பிடித்து, உலகின் நான்கு சீரிய வாய்மைகளையும் நன்குணர்ந்து கொண்டு, அவன் அச்சத்தை உதறிவிட்டுப் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரையேறி விடுகிறான்!’

அவ்வுரைகளைக் கேட்ட மன்னர், ‘நீ உலகாளும் மன்னனாக இருந்திருந்தால், இத்தகைய உயர்ந்த தருமத்தை உபதேசிக்க யாரும் இருக்கமாட்டார்கள்; நான் இதைக் கேட்கும் பேறும் வாய்த்திருக்காது; உலகில் ஜனன மரண விலங்குகள் மக்களை விட்டு அகலாது பிணித்துக் கொண்டேயிருக்கும்! நீ நாடு துறந்ததும் நலமேயாயிற்று!’ என்று மனத்துள் கருதி மகிழ்ந்தார்.

அற உரைகள்

பின்னர் புத்தர் பெருமான், ஆயிரமாயிரமாகக் கூடியிருந்த மக்கள் அனைவரும் அமைதியோடிருந்து அறம் கேட்க ஆவலாயிருப்பதை அறிந்து, தாம் பிறந்த திருப்பதியிலேயே, தமது அரிய தரும உபதேசத்தை ஆரம்பித்தார். ஐயனின் அருள் மொழிகளிற் சில[1] வருமாறு:

‘அறிவுக்கு எட்டாதவைகளை ஆராய்ந்து கொண்டு காலத்தை வீணாக்க வேண்டாம்; அளக்க முடியாததைச் சொற்களால் அளவிட முயல வேண்டாம்; ஆழம் காண முடியாத ஆழத்திலே சிந்தனைக் கயிற்றை ஆழ்த்தி இழக்கவேண்-

  1. ‘The Light of Asia-'By sir Edwin Arnold. உலகப் புகழ் பெற்ற கவிவாணர் எட்வின் ஆர்னால்ட் பொதுவான புத்தருடைய உபதேசங்களைத் தொகுத்து அளித்துள்ளார். அவைகளிலே மிக முக்கியமானவை இங்கே குறிக்கப்பெற்றுள்ளன