பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 245

வைத்துப் பூஜை செய்து பலனை எதிர்ப்பார்த்து இருக்க வேண்டாம்’

‘உயர்ந்தோர்க்கும், தாழ்ந்தோர்க்கும், யாவர்க்குமே தமது விதியின் மேல் அதிகாரம் உண்டு. உயிரும் சதையும் கொண்டு உலாவும் ஜீவர்கள் யாவர்க்கும் விதி ஒன்று தான்; அவரவர் செயலே இன்பத்திற்கும், ஏனைத் துன்பத்திற்கும் காரணம்.

‘செய்த வினைகளே இப்போது செய்யும் வினைகளின் காரணம், கடைசியாகச் செய்தது இப்போது முதலாவதாக விளைகின்றது; முதலாவது செய்ததே முடிவானதாக விளைகின்றது.

‘தேவர் யாவரும் முன் செய்த நல்வினைப் பயனைத் துய்ப்பவரே; நரகில் உழல்வோர் அனைவரும் பழமையான தங்கள் தீவினைப் பயனைத் துய்ப்பவராம்.

‘இந்திரனுக்கு மேலாக உங்கள் நிலையை நீங்களே உயர்த்திக்கொள்ள முடியும்; புழுக்கள் கொசுக்களுக்குக் கீழாகவும் உங்களைத் தாழ்த்திக் கொள்ளவும் முடியும்- இரண்டும் உங்கள் கையிலேதான் இருக்கின்றன.

‘சம்சார சக்கரம்[1] சுழல ஆரம்பித்தால், அது நிற்பதுமில்லை; மாறுவதுமில்லை; சக்கரத்தின் ஆயக்கால்கள் மேலும் கீழுமாய்ச் சுற்றிக் கொண்டேயிருக்கும்!


  1. சம்சார சக்கரம் - ஜனன மரண வளையம்.