பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்தரின் அவதாரம் ⚫ 23

மன்னரைக் கண்டதும் ஒரு பணிப்பெண், பட்டுக்துகிலில் பாலனை எடுத்துக்கொண்டு, அவர் முன்பு சென்றாள்; ‘இளவரசர் தம் தந்தையை வணங்குகிறார்!’ என்று கூறிப் புன்னகை பூத்து அவரிடம் பொற்பதுமை போன்ற குழந்தையைக் காட்டினாள். சித்தோதனர், முதலில் மந்திரி, மறையோர்களிடம் காட்டு, அதன் பிறகு குழந்தை என்னைப்பார்க்கட்டும்!’ என்றார். முதன் மந்திரியும், மற்ற மறையோர்களும் மன்னரையும் மைந்தனையும் வாயாரட் புகழ்ந்து வாழ்த்தினார்கள். ‘புனிதமான சக்கர வர்த்தி அவதரித்திருக்கிறார்! சாக்கியர் குலமே தழைத்து விட்டது!’ என்று கூறி மகிழ்ந்தார்கள். மன்னரும் போதி சத்துவரின் பேரழகையும் முகவிலாசத்தையும் கண்டு பெருமகிழ்ச்சியுற்றார். குழந்தையின் குரல் இமயமலைச் சாரலிலுள்ள கருவிகப் பறவைகளின் இசைபோல் இனிமையாயும் உள்ளத்தை உருக்குவதாயும் இருந்தது. மாயா தேவி மன்னரிடம் நெருங்கி வந்து ‘மகாராஜா! சக்கரவர்த்தியாக வரக்கூடிய இலக்கணங்கள் யாவை? தெரிந்தால், நானும் மற்றவர்களைப்போல் மகிழ்ச்சியடைவேன்!’ என்று கேட்டாள். சுத்தோதனர் கூட வந்திருந்த வேதியர் களைத் திரும்பிப் பார்த்து, அந்த இலக்கணங்களை எடுத்துக் கூறும்படி வேண்டிக் கொண்டார். அவ்வாறே அந்தணர்கள் விளக்கிக் கூறினார்கள்.

மக்களின் மகிழ்ச்சி

பல அற்புதங்களின் நடுவே பிறந்த தம் அற்புதக் குழந்தையை நகருக்கு அழைத்துச் செல்ல எந்த வாகனத்தை உபயோகிக்கலாம் என்று சுத்தோதனர் ஆலோசனை செய்தார் அவருடைய ஆலோசனை முடியு முன்னரே, தெய்வத் தச்சன் விசுவகர்மன் தெய்விகமான பல்லக்கு ஒன்றைத் தயாரித்து உலும்பினித் தோட்டத்திற்கு அனுப்பு வைத்தான். மானிடர் அதுவரை அறிந்-