பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264 ⚫ போதி மாதவன்

‘இங்கே வா, பிக்கு! வந்து பரிசுத்த வாழ்க்கையை மேற்கொள்வாயாக!’ என்று அண்ணல் பரிவுடன் வரவேற்றார். அந்தக் கணத்திலேயே உபாலி, தலை முடி இழந்து. கையில் திருவோட்டுடன், காவியுடையில் பிக்குவாக மாறிக் காட்சியளித்தான்!

சாக்கிய இளைஞர்கள் நீராடித் திரும்பிவந்து ஐயனைத் தரிசிக்கையில், அவர் அருகில் உபாலி பிக்குவாக அமர்ந்திருந்ததைக் கண்டு வியப்படைந்தனர். அவர்கள் தீக்கை பெறுகையில், பிக்குவான அவனையும் வணங்க நேர்ந்தது பற்றி அவர்கள் சிறிது மனக்கசப்பு அடைந்ததாகத் திபேத்திய வரலாறு கூறுகின்றது. போதிநாதரும், அவர்கள் எல்லோரிடத்திலும் முழு நம்பிக்கை கொள்ளாமல், சந்தேகத்துடனேயே அவர்களைச் சங்கத்தில் சேர்த்துக்கொண்டார்.

அன்று சங்கத்தில் சேர்ந்த பிக்குக்களிலே அனுருத்தன் முதன்மையானவன். அதுவரை அவன் சித்தார்த்தரைப் போல மூன்று அரண்மனைகளிலே சுகமாக வசித்து வந்தவன். அவன் தத்துவ நூல் ஆராய்ச்சியில் தலை சிறந்து விளங்கியதால், பின்னால் பௌத்த தரும வளர்ச்சிக்கு அவன் பெருந்துணையாக விளங்கினான்.

தேவதத்தன் பொறாமைக் குணமுள்ளவன். கிறிஸ்து நாதருக்கு யூதாஸ் என்ற துரோகி வாய்த்ததுபோல; அவன் போதி நாதருக்கு வாய்த்திருந்தான். அவனால் பிற் காலத்தில் அவருக்கும் தருமத்திற்கும் பல கேடுகள் விளைந்தன.

நாவிதன் என்று மற்ற இளவரசர்களால் முதலில் இகழப்பெற்ற உபாலியே பின்னால் பெரிய மேதையாக விளங்கி, புத்தர் பெருமான் சங்கத்திற்கும் பிக்குக்களுக்கும்