பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்தன் ⚫ 267

ஓடிவரும்; கண்களைக் கருவண்டுகள் வட்டமிடும்; ஓங்கி யெழும் மார்பைக் கண்டு தாமரை முகைகள் தலை கவிழும்.

காதலர் பிரிவு

ஒரு சமயம் அரண்மனை மாடியிலே நந்தன் கண்ணாடி பிடித்து நிற்க, அவன் காதலி அதைப் பார்த்தவண்ணம் தன் முகத்தைச் சிங்காரித்துக் கொண்டிருந்தாள். அப்போது நந்தனுடைய மூச்சு கண்ணாடியில் பட்டுவிட்டது. உடனே அவள் கோபமடைந்து, அருகிலிருந்த தாமரை மலரை எடுத்து அதைக்கொண்டு அவனை அடித்தாள். நந்தன் பேரானந்தமுற்றுக் கண்ணாடியை ஒழுங்காகப் பிடித்து நின்றான்.

அந்த நேரத்தில் அந்த அரண்மனையில் பிச்சை ஏற்பதற்காகப் புத்தர் பிரான் உள்ளே நுழைந்து பார்த்து, எவரும் தம்மைக் கவனியாததால், வெளியேறிச் சென்றார். பணிப்பெண்கள் பலரும் பல வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், எவரும் அவர் வரவைக் கவனிக்கவில்லை. சில பெண்கள் சுண்ணம் இடித்துக்கொண்டிருந்தனர்; சிலர் பட்டு உடைகளுக்கு வாசனைத் திரவியங்கள் போட்டுக்கொண்டிருந்தனர்; சிலர் அறைகளைச் சிங்காரித்துக்கொண்டிருந்தனர்; ஒவ்வொருவரும். ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் மாடியிலிருந்து வெளியே பார்த்த ஒரு பெண் ஐயன் அரண்மனையிலிருந்து திருவோட்டுடன் வெளியேறுவதைக் கண்டுவிட்டாள். பெருமானிடம் நந்தனுக்கு அளவற்ற அன்பும் மரியாதையும் உண்டென்பதை அறிந்த அவள், உடனே அவனிடம் ஓடிச்சென்று செய்தியைக் கூறினாள். நந்தன் அதைக் கேட்டு என்ன செய்வதென்று