பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270 ⚫ போதி மாதவன்

நந்தன் வருத்தத்தோடு மெல்லத் தொடர்ந்து சென்றான். அரண்மனையிலே சுந்தரி தன் வரவை எதிர்பார்த்துத் துடித்துக்கொண்டிருப்பாளே என்றும், அவள் திலகம் அவ்வளவு நேரத்திற்குள் காய்ந்திருக்குமே என்றும் கவலையுற்றான். முடிவில் இருவரும் நியக்குரோத வனத்தை அடைந்தனர்.

காமம், மோகம் முதலியவைகளை அழித்து, அறம் ஆனந்தத்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் அறப் பள்ளியை அடைந்ததும், ததர்கதர் தரும சக்கரம் பொறித்திருந்த தமது. கரத்தால் தம்பியின் தலையைத் தடவிக் கொடுத்து, அருகே அமரும்படி சொன்னார். பிறகு அவன் அறிய வேண்டிய நீதிகளை முறைப்படுத்திக் கூறலானார் :

‘அன்ப! இந்த உடல் வர்ணம் தீட்டிய பொம்மை! இது புண்கள் நிறைந்தது. இந்த உடல் நலிந்து தேய்வது. இது நோய்களின் கூடு; மிகவும் நொய்மையானது. இந்த அசுத்தக் குவியல் உடைந்து சிதறிப் போகும்; வாழ்வின் முடிவு சாவு தான்! ஆதலால் உண்மையான சாந்தியைப் பெறுவதற்கு நீ முயல வேண்டும்.

‘கனவு போன்ற நிலையில்லாத காதல் இன்பத்திலிருந்து உள்ளத்தை விடுவித்து ஒருநிலைப் படுத்த வேண்டும். தீயைக் காற்றினால் அவிக்க முடியுமா? அதுபோல் காம ஆசைக்கு இடம் கொடுத்துத் திருப்தியடையவே முடியாது.

அறச் செல்வமே தலைசிறந்த செல்வம்; மெய்ஞ்ஞானத்தின் சுவையே தெவிட்டாத தீஞ் சுவை; அகத்தின் நிறைவே ஆனந்தம்.

‘நீதியான நல்வாழ்வை நாடி இடைவிடாது செய்யும் முயற்சியே முதன்மையான பயனை அளிக்கும்.