பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்தன் ⚫ 273

‘உலகம் நிலையற்றது என்பதை உணர்ந்து கொள்! இது ஒரு மாயை! - துக்க வலையை அறுத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்று உனக்கு விருப்பமிருந்தால் மயக்கத்தைக் கைவிடு! - உன் காதலியிடம் கொண்டுள்ள மயக்கத்தை முதலில் நீக்க வேண்டும், மரணம் வந்து அழைப்பதன் முன்னம், இளமை இருக்கும்போதே, மகோன்னதமான நன்மையைப் பெறுவதற்கு உள்ளத் துணிவு கொண்டு எழுவாய், எழுந்து உரிய செயல்கள் கொள்வாயாக!’

நந்தன் அவர் உத்தரவுப்படியே நடப்பதாக உறுதி கூறினான். ஆனந்தர் அவனை அழைத்துச் சென்று அவன் தலைமுடியை மழிக்க ஏற்பாடு செய்தார். அப்போது தான் சிறைப்பிடித்து வரப்பெற்ற காட்டு யானை கலங்குவது போல், அவன் கலங்கிக் கண்ணீர் பெருக்கிக் கொண்ருந்தான். தலை முண்டிதமாயிற்று; காவியுடையும் தரிக்க நேர்ந்தது!

சுந்தரியின் நிலை

அரண்மனையிலே சுந்தரி வழிமேல் விழிவைத்து நெடு நேரம் நாயகன் வரவை எதிர்பார்த்திருந்தாள் அவனைக் காணாமையால் தன் அணிகளைக் களைந்தெறிந்து, மலர்களை உதிர்த்து விட்ட செடிபோல், மலரமளியிலே சாய்ந்திருந்தாள். கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. பணிப்பெண்களின் காலோசை கேட்ட போதெல்லாம் அவளுடைய கண்கள் அறையின் வாசலைப் பார்த்தன. நாயகன் வரவில்லை; அவள் உள்ளத்தில் கோயில் கொண்டிருந்த நந்தனைக் காணவில்லை !

நந்தன் ஏமாற்றுவானா? வேறு யாரோ ஒரு காதலியை நாடிப் போயிருப்பதால்தான் தன்னை அவன் வஞ்சிக்கத் துணிந்தான் என்று அவளுக்குத் தோன்றிற்று.