பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274 ⚫ போதி மாதவன்

‘எவளையோ போய்ப் பார்ப்பதற்காகப் புனிதமான பகவரின் பெயரைச் சொல்லிக்கொண்டு போயிருக்கிறான், அந்த முனிவரிடம் உண்மையான பக்தியுள்ளவர் எவரும் பொய் கூறத் துணியார். இப்போது நந்தன் வேறு எவளுக்கோ கண்ணாடி பிடித்துக்கொண்டு நிற்கிறான்!’ என்று அவள் எண்ணினாள். இவ்வாறு எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி யெண்ணி அவள் நெஞ்சம் புண்ணானாள்.

அந்நிலையில் பணிப்பெண் ஒருத்தி ஓடிவந்து, ‘இளவரசர் தலையைச் சிரைத்துக்கொண்டு பிக்குவாகி விட்டாராம்! அவர் அழுது புலம்பிக் கொண்டேயிருக்கையில், அவருடைய அண்ணா–ததாகதர்–அவரைத் துறவியாக்கி விட்டாராம்!’ என்று கூறினாள்.

சுந்தரிக்கு வாழ்வே இருண்டுவிட்டது போலாயிற்று. அவள் உள்ளமுடைந்து அமளியிலிருந்து கீழே தரையிலே உருண்டுவிட்டாள். கனிகளின் கனம் தாங்காமல் முறிந்து வீழ்ந்த மலர்க்கொம்புபோல் அவள் தரைமீது கிடந்து துவண்டு கொண்டிருந்தாள். கண்ணீரால் கண்கள் சிவந்தன. உள்ளத்தின் துயரம் உடலை உலுக்கிக் கொண்டிருந்தது.

தாமரைத் தளம் போன்ற கண்கள், தாமரை முகம், செந்தாமரைபோன்ற சிவந்த வண்ணமுள்ள துகில் ஆகிய வற்றுடன் ஒரு மலர்மாலை வெய்யிலில் காய்ந்து வாடுவது போல், அவள் முடங்கிக் கிடந்தாள். தரைமீது வீழ்ந்த திருமகளின் தங்கச் சிலை போலிருந்தது அவள் தோற்றம். அந்த அறையிலே தன் நாயகனுடைய அணிகளையும் ஆடைகளையும் பார்க்கும் போதெல்லாம் அவள் உள்ளம் பற்றியெரிந்தது. தான் மீட்டும் வீணையை அவள் பார்த்ததும், தன் இதய வீணையின் தந்திகள் யாவும் அறுந்து கிடப்பதை எண்ணினாள்! அவளுக்கு எல்லாப் பொருள்களும் கைத்தன; வாழ்வே துயரமாகி விட்டது! அந்த