பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்தன் ⚫ 277

ஆசைகொண்டான். இல்லறமும் இல்லாமல், துறவறமும் இல்லாமல், நடுவிலே ஊசலாடிக் கொண்டிருத்தல் அவனுக்குப் பெரும் வேதனையாகி விட்டது.

புத்தரும் வெளியே பிச்சைக்குப் போயிருந்தார். நந்தன் துறவைத் துறந்து, தவத்திற்கு விடைகொடுத்து விட்டுக் கிளம்பத் தீர்மானித்தான்

அவன் உள்ளப் போக்கை அறிந்து கொண்ட பிக்கு ஒருவர், அவன் அருகில் வந்து அமர்ந்து, அரிய நீதிகள் பலவற்றை எடுத்துச் சொன்னார். ‘உன் கண்ணீர்த் துளிகள் உன் உள்ளத்தின் அறியாமையை வெளிக்காட்டு கின்றன. உணர்ச்சிகளை வென்று அடக்கி, உயர்ந்த சாந்தியைப் பெற முயற்சி செய்யவேண்டும். உள்ளத்தின் இயல்புகள் ஒன்றல்ல, இரண்டல்ல-ஆனந்தம்! மனத்தின் ஆழத்தை மதிப்பிட்டுக் கூறமுடியாது. மனத்தை ஒரு நிலைப் படுத்துவதே தலைமையான கலை!’ என்று அவர் கூறினார். ‘தீப்பட்டு எரியும் காட்டில் தன் கூட்டை எண்ணிப் பறவை ஓடுவது போலிருக்கிறது உன் எண்ணம்!’ என்று அவர் பல உபமானங்கள் மூலமும் ஞானமார்க்கத்தை விளக்கியுரைத்தார். ‘புல் தானாக வளரும்; ஆனால் பயிரைப் பாடுபட்டுத்தான் வளர்க்க வேண்டும். துக்கம் தானாக வளரும்; ஆனால் இன்பத்தைப் பாடுபட்டே வளர்க்க வேண்டும். உள்ள நிறைவே இன்ப மார்க்கம்!’ என்று கூறி, மனிதன் தன் முயற்சியாலேயே நிலையான இன்பத்தைப் பெற முடியும் என்பதை அவர் எடுத்துக் காட்டினார்.

எல்லாவற்றையும் கேட்டும் நந்தன் மனம் திரும்பவில்லை. பிக்கு பெருமானிடம் நிகழ்ந்ததைக் கூறினார்.

பெருமான் நந்தனைத் திரும்புவதற்கு ஒரு புது முறையைக் கையாள வேண்டும் என்று கருதினார். அவர் அறமுணர்த்திய வரலாறுகளைப் பார்த்தால், உபதேசம் பெறும் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு பலதிறப்பட்ட