பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278 ⚫ போதி மாதவன்

முறைகளைக் கையாண்டிருப்பது தெரியவரும். சாரீ புத்திரர், மெளத்கல்யாயனர் போன்ற மேதாவிகள் உள்ளக் கனிவோடு அவரை அண்டுகையில், ‘வருக!’ என்று கூறி ஒரு சொல்லாலேயே அவர்களை அவர் ஆட்கொண்டார். அக்கினி காசியபர் சம்பந்தமாக நாகத்தை வென்று, வேறு சில விசித்திரச் செயல்கள் புரிந்து, அவரை வழிபடுத்தினார். இருத்தி ஆற்றல்களை உபயோகிக்கவே கூடாது என்று அவர் சீடர்களுக்கு உபயோசித்து வந்தார். ஆனால் அவர் தமது அருமைத் தந்தையர்க்காகவும், சாக்கியர்க்காகவும் தாமே சில சித்துக்களைச்[1] செய்து காட்டினார். பொதுவாக இனிய உரையாடல் மூலமே அவர் பெரும்பாலான மக்களுக்குத் தமது தருமத்தை விளக்கி வந்த போதிலும், இவ்வாறு சில சந்தர்ப்பங்களில் வேறு முறைகளைக் கையாண்டதாக வரலாறுகள் குறிக்கின்றன. பிற்காலத்தில் அங்குலி மாலன் என்ற பெரிய கொள்ளைக்காரனை அவர் ஆட்கொண்டு அருளிய ஒரு தனி முறையாக விளங்குகின்றது, அத்தீயோனின் மனத்தை வசியம், செய்து ‘வா!’ என்று அவர் தம்முடன் அழைத்து வந்துவிட்டார். ஆனால் நந்தன் விஷயத்தில், ஆப்பைக் கொண்டே ஆப்பை அகற்ற வேண்டும் என்ற முயற்சியை அவர் கையாளத் தீர்மானித்தார்.

சலன புத்தியுள்ள தம்பியை அவர் தம்மோடு அழைத்துக்கொண்டு ஆகாய மார்க்கமாக இமயமலை முதலிய பிரதேசங்களுக்குச் சென்று, கடைசியில் வானத்திலே சென்று இந்திரன் உலகையும் அவனுக்குக் காண் பித்தார். அங்கேயிருந்த தேசுமயமான தேவ்கன்னியரிடம் நந்தன் நெஞ்சைப் பறிகொடுத்தான். அவன் உள்ளத்தில் சுந்தரி அமர்ந்திருந்த இடத்தில் அப்சரசுகள் அமர்ந்து கொண்டனர்.


  1. சித்துக்கள்-மாய வித்தைகள்.