பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதினாறாம் இயல்

விசாகை

‘இருட்பார வினைநீக்கி
எவ்வுயிர்க்கும் காவல்என
அருட்பாரம் தனிசுமந்த
அன்றுமுதல் இன்றளவும்
மதுஒன்று மலரடிக்கீழ்
வந்தடைந்தோர் யாவர்க்கும்
பொது அன்றி நினக்(கு)உரித்தோ,
புண்ணிய நின் திருமேனி!’

–வீரசோழிய உரை

பிற்காலத்திலே சிராவஸ்தி நகரில் புத்தர் பெருமானின் முதன்மையான அடியர்களாக விளங்கியவருள் ஒருத்தி விசாகை. பௌத்தர்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் ஏழு பெண்மணிகளில் அவள் ஒருத்தி. அவளுடைய தந்தையரான தனஞ்சயர் பெருஞ் செல்வர். அவர் முன்னால் அங்கநாட்டில் வசித்துவந்தவர். பின்னர் மன்னர் பிரசேனஜித்தின் அழைப்பின் பேரில் சிராவஸ்தி நகரில் வசிப்பதற்காக அவர் புறப்பட்டு வந்தார். வழியில் சாகேத நகரிலேயே தங்கியிருக்கலாம் என்று அவருக்குத் தோன்றிற்று. கோசல மன்னரும் அதற்குச் சம்மதித்ததால், அவர் அங்கேயே பெரிய மாளிகைகள் அமைத்துக்கொண்டு வசிக்கலானார். விசாகையும் அவரோடு இருந்தாள். அவள் சிறு வயதிலேயே போதி நாதரின் உபதேசம் பெற்றுப் பௌத்த தருமத்தை மேற்கொண்டிருந்தார். பெருஞ் செல்வமும், அருங் குணங்களும் வாய்ந்த விசாகை பின்னால் பெரும்புகழ் பெற்று விளங்கியதால், அவளை வியந்துரைக்கும் கற்பனைக் கதைகள் பல தோன்றி