பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாகை ⚫ 295

யானைக் கூடங்கள், குதிரை லாயங்களையெல்லாம் இடித்து அவற்றிலிருந்த கட்டைகளை யெல்லாம் விறகாக எரிக்கும்படி கொடுத்தாராம்!

திருமணத்தன்று விசாகைக்குச் செய்திருந்த அலங்காரங்களை அளவிட்டுரைக்க முடியாது. தலையிலிருந்த பாதங்கள் வரை அவள் உடலை மறைத்து நகைகள் அணியப் பெற்றிருந்தாள். தலையில் நவரத்தினங்கள் இழைக்கப் பெற்று மயில் உருவத்திலிருந்த சூளாமணி ஒன்றை அவள் அணிந்திருந்தாள். அந்த மயிலின் கழுத்து முழுவதும் ஒரே மரக்தப் பச்சையில் அமைந்திருந்தது. காற்று வீசும்போது அந்த மயிலின் வாயிலிருந்து வரும் ஒலி உயிருள்ள மயில் அகவுவதுபோலவே இருந்ததாம்! மொத்தம் ஒன்பது கோடி மசுரன்கள்[1] பெறுமதியுள்ள ஆபரணங்களை அவள் அணிந்திருந்தாள். அன்று தனஞ்சயர் அவளுக்கு அளித்திருந்த பரிசுகளில் தங்கம் மட்டும் ஐந்நூறு வண்டிகள் இருந்ததாம்! மற்றும் வெள்ளி முதலிய உலோகங்களில் செய்த பாத்திரங்கள், பண்டங்கள் எல்லாம் வண்டிவண்டியாக இருந்தன. ஆயிரக்கணக்கான பணிப்பெண்களும் விசாகையோடு அவளுடைய புக்ககத்திற்குச் செல்வதற்காகத் தயாராக இருந்தனர். அன்று சாகேத நகரமே ‘திருமண மண்டபம் போல விளங்கிக் கொண்டிருந்தது. இத்தனை வைபவங்களுடன் திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

விசாகையும் விருந்தினர்களும் சிராவஸ்திக்குப் புறப்பட்டுச் செல்கையில், அவர்களைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான வண்டிகள் சென்றன. நகரை அடைந்ததும், மிகாரர் தம் மருமகளின் அழகையும், அவள் நகைகளையும் பற்றி ஜனங்கள் சந்தேகம் கொள்ளாத முறையில்,


  1. மசுரன்–அக்காலத்துப் பொற்காசு.