பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசாகை ⚫ 305

சங்கத்தின் நடுவில் அமர்ந்திருந்தாலும், அவர் சங்கத்திலிருந்து வெகு தூரத்தில் விலகியிருப்பவராவார்; சங்கமும் அவரிடத்திலிருந்து வெகு தூரம் எட்டியேயிருக்கும். இது மூன்றாவது குணம்.

‘ஓ பிக்குக்களே! மகா நதிகளெல்லாம் பெருங் கடலுள் வீழ்ந்த பிறகு, தங்கள் பெயர்களையும் வரலாறுகளையும் இழந்து, ஒரே மகா சமுத்திரமாகக் கருதப் பெறுகின்றன. அது போலவே, நான்கு வருணத்தார்களும் உலக ஆசைகளைத் துறந்து, ததாகதர் பிரகடனம் செய்துள்ள தருமத் தையும் விநயத்தையும் மேற்கொண்ட பிறகு, தத்தம் பெயர்களையும் குலங்களையும் துறந்து, ஒரே தன்மையான சாக்கிய புத்திய சிரமணர்களாக ஆகிவிடுகிறார்கள். இது நான்காவது குணம்.

ஓ, பிக்குக்களே! உலகத்திலுள்ள ஆறுகளெல்லாம், ஓடி ஓடிச் சென்று, முடிவிலே பெருங் கடலில் சேர்ந்தபோதிலும், வானத்து மழை நீரெல்லாம் அக்கடலிலேயே வீழ்ந்தபோதிலும், அதனால் அது மிகவும் குறைந்திருப்பதாகவோ, மிகவும் நிறைந்திருப்பதாகவோ காணப்படுவ தில்லை. அதுபோலவே, அநேகம் பிக்குக்கள் (நிருவாணப் பேற்றை அடைந்து), தாங்கள் இருந்த சுவடுகள் தெரியாமலே மறைந்து விட்ட போதிலும், அதனால் சங்கம் அதிகம் குறைந்திருப்பதாகவோ, அதிகம் நிறைந்திருப்பதாகவோ காணப்படுவதில்லை. இது ஐந்தாவது குணம்.

‘ஓ பிக்குக்களே! மாபெருங் கடலுக்கு ஒரே சுவைதான் இருக்கிறது–அதுவே உப்புச் சுவை.