பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 311

நகருக்கு அழைத்து வந்தால் அவர்களுடைய மகிமையால் துயரங்கள் நீங்கும் என்று பல மக்கள் கூறினர். முடிவில் அச்சமயத்தில் இராஜகிருகத்திலே வேணுவன விகாரையில் தங்கியிருந்த புத்தர் பெருமானையே அழைத்து வர வேண்டும் என்று தீர்மானமாயிற்று. லிச்சவிகளின் தலைவனான மன்னனும் அதற்கு இசைந்தான். ஜனப்பிரதி நிதிகள் சிலர் பிம்பிசார மன்னரிடம் சென்று பெருமானைத் தங்கள் நகருக்கு எழுந்தருளும்படி கேட்டுக்கொள்ள வேண்டினர். அவர் பெருமான் எல்லோரிடத்திலும் கரையற்ற கருணையுடையவர் என்றும், அவர்களே நேரில் அவரிடம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

அவர்கள் ஐயனிடம் நேரில் தெரிவித்ததும், அவரும் வைசாலிக்குப் புறப்படலானார். உடனே பிம்பிசாரர் கங்கை வரை சாலையைச் செப்பனிட்டார். பெருமான் புறப்பட்டதுமே வைசாலியிலும் சுற்றுப்புறங்களிலும் மழை பொழிய ஆரம்பித்தது. கங்கையின் மறுகரையிலிருந்த பாதையை லிச்சவிப் பிரபுக்கள் செம்மையாக்கி வைத்தனர்.

வைசாலி விஜயம்

வைசாலியை அடைந்ததும், பெருமான் ஆனந்தரிடம் தமது திருவோட்டை அளித்து, அதில் நீரெடுத்துக் கொண்டு, நகரின் வீதிகளிலே அந்நீரைத் தெளித்து வரும் படியும், சுற்றி வரும்போது தாம் உபதேசித்திருந்த சூத்திரங்கள் சிலவற்றை ஓதும்படியும் சொல்லி வைத்தார். ஆனந்தர் அவ்வாறு செய்துவிட்டுத் திரும்பியதும், நகரில் நோயும் பஞ்சமும் நில்லாது நீங்கின என்று சொல்லப் பட்டிருக்கின்றது.

அந்நகரிலுள்ள மகாவனத்தில் அமைத்திருந்த கூடாகார விகாரையிலே பெருமான் தங்கியிருந்து மக்களுக்கு