பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 315

கடைசி நாளன்று சூரியன் உதிக்கும் நேரத்தில், கடைசி முறையாக மன்னர் மைந்தரை வணங்கி விட்டு, பூத உடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார்.[1] அப்போது அவருக்கு வயது தொண்ணூற்றேழு.

புத்தரும், சாரீபுத்திரரும் சேர்ந்து மன்னரின் உடலை நீராட்டி, மக்களும் சாக்கியத் தலைவர்களும் தரிசனம் செய்வதற்காக அதை ஓர் உயர்ந்த பீடத்தில் வைத்திருந்தனர். பின்னர் பிரேத ஊர்வலத்திற்கும் ஏராளமாக மக்கள் திரண்டு வந்திருந்தனர். மேள வாத்தியங்களுடன் ஊர்வவம் மயானத்தை அடைந்ததும், ததாகதர் தமது கரங்களாலேயே பிரேதத்திற்கு நெருப்பு வைத்தார்.

பெண்களும் சங்கத்தில் சேர்தல்

தந்தையரின் தகனக் கிரியைகள் முடிந்த பின்பு புத்த தேவர் சிறிது காலம் நியக்குரோத வனத்திலே தங்கி யிருந்தார். அவ்வமயம் ஒருநாள் அவருடைய சிற்றன்னை கௌதமி அங்கே சென்று, மைந்தராகிய மாமுனியைக் கண்டு வணங்கி, ஒரு புறத்தே ஒதுங்கி நின்றாள். அவ்வாறு நின்று கொண்டு, அவள் ஐயனைப் பார்த்து, பகவ! ததாகதர் அருளியுள்ள தரும-விநய முறைப்படி வீட்டைத் துறந்து வீடற்ற வாழ்க்கையை மேற்கொள்வதற்குப் பெண்களும் அனுமதிக்கப்பெற்றால் நலமாகும்’ என்று சொன்னாள்.

‘போதும், கௌதமி! ததாகதர் அருளிய தரும-விநய முறைப்படி வீட்டைத் துறந்து வீடற்ற வாழ்க்கையை மேற்கொள்ளப் பெண்கள் அனுமதிக்கப் பெறுவதைப்


  1. அன்று கி.மு. 534 (ஈசான சகம் 107 ஆம் ஆண்டு ) ஆடி மீ, 18-ஆம் ௳, சனிக்கிழமை, பூர்ணிமை.