பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 321

அவை ஐந்நூறு ஆண்டுகளே நிலைத்திருக்கலாம்!” என்று கூறினார்.

அன்னை கௌதமி சங்கத்தில் சேர்ந்த சமயத்திலேயே தேவி யசோதரையம் பிக்கணியானாள்; அவர்களுடன் மகாவனத்திற்குச் சென்றிருந்த மற்ற ஸ்திரீகளும் துறவறத்தை மேற்கொண்டனர்.

பௌத்தமும் பெண்களும்

புத்தர் பெருமான் பெண்களைப் பற்றிக் கொண்டிருந்த கருத்தையும், பௌத்த தருமத்தில் அவர்களுக்கு உரிய நிலையையும் இங்கே குறிப்பிடுதல் அவசியம் பெண்களைப் பாவிகள் என்றோ , மாயப் பிசாசுகள் என்றோ புத்தர் கருதவில்லை ஆடவர்கள் உயர்ந்தவர்கள். முக்திக்கு உரியவர்கள் என்றும் அவர் கருதவில்லை. ‘நரகத்திற்குச் செல்லும் பாதையில் வழிகாட்டி நிற்கும் ஒளி விளக்குகள் பெண்கள் என்பது அவர் கொள்கையன்று. அவருடைய உபதேசங்களை ஆயிரக்கணக்கான ஆடவரும் பெண்டிரும் ஒரே கூட்டமாக இருந்தே கேட்டு வந்தனர்.

ஆயினும் பெண்களைச் சங்கத்தில் சேர்ப்பது பற்றி அவர் தயக்கமடைந்ததன் காரணங்கள் பொதுவான மனித இயல்பைப் பற்றி அவர் தெள்ளத் தெளிவாக அறிந்திருந்தமையும், அக்காலத்திலே புறச்சமயவாதிகள் வீண் பழி சுமத்த முன்வரக்கூடும் என்பதுமேயாம். ஆணாயினும், பெண்ணாயினும். அப்பழுக்கில்லாமல், மாசுமறுவில்லாமல், மிகத் தூய்மையுடன் வாழ வேண்டும் என்பதும், அத்தகைய வாழ்க்கைக்கு இடைவிடாத பயிற்சி அவசியம் என்பதும் அவர் கொள்கை. கண்களால் பார்ப்பவைகளும், காதுகளால் கேட்பவைகளும், மற்றைப் புலன்களால் உணர்பவைகளும் மனத்தைப் பாதிக்கின்றன. இதனால் உணர்ச்சிகள் ஏற்படுகின்றன; விருப்-