பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 327

பார்த்துக் கூட்டங் கூட்டமாகக் காத்திருந்தனர். அப்போது மௌத் கல்யாயனர் வானுலகம் சென்று, ஐயனைத் தரித்து, அவர் பூவுலகுக்கு எப்பொழுது திரும்பக்கூடும் என்பதைக் கேட்டார். ஏழு நாட்களில் திருடுபுவதாக விடை கிடைத்தது. மேலும், வானுலகிலிருந்து தாம் இறங்க உத்தேசித்துள்ள தலம் சிராஸ்வதியிலிருந்து முப்பது யோசனை தூரத்திலிருந்த சங்கர்ஷபுரம்[1] என்றும் ஐயன் கூறினார்.

மௌத்கல்யாயனர் ஜேதவனம் திரும்பியதும், மக்களையும் பிக்குக்களையும் அழைத்துக் கொண்டு சங்கர்ஷ புரத்திற்குச் சென்றார். அங்கே குறித்த தினத்தில் போதி வேந்தர் தேவருலகை நீத்துத் திரும்பிவந்து காட்சியளித்தார். அவர் அங்கு எழுந்தருளியதும் முதலாவதாகத் தரும சேனாபதியான சாரீபுத்திரர் எதிர்கொண்டு வணங்கினார். பின்னர் மற்றவர் சென்று முறைப்படி வணங்கினர். அன்று பெருமான் உபதேசம் செய்கையில், சாரீ புத்திரருடைய மேதையையும், மேன்மையையும் யாவரும் அறியும்படி விளக்கவேண்டும் என்று திருவுளம் கொண்டு, அவரிடம் சில வினாக்களைக் கேட்டார். அவைகளுக்குத் தரும சேனாபதி அளித்த விடைகளை வேறும் எவரும் கூறியிருக்க முடியாது என்பதை யாவரும் உணர்ந்து மகிழ்ச்சியுற்றனர்.


  1. பாலி மொழியில் இந்நகரை ‘ஸங்கஸ்ஸா’ என்று கூறுவர். இது கன்னோசி (Kanowj) நகரிலிருந்து ஐம்பதாவது மைலில் உள்ளது. இங்கே பௌத்த சமய சம்பந்தமான ஏராளமான புதை பொருள்களும், பாழடைந்த பல கட்டடங்களும் இருப்பதாக லெப். கன்னிங்ஹாம் குறித்துள்ளார்.