பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330 ⚫ போதி மாதவன்

அடுத்தாற்போல் சுந்தரி என்பவள் தோன்றினாள். பகவரின் எதிரிகள் அவளைத் தூண்டி விட்டனர். அவள் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஜேதவன விகாரைக்குச் செல்வதுபோல அந்தப் பக்கமாக நடந்து போவதும், காலையில் அந்தப் பக்கமிருந்து நகரை நோக்கி வருவதும் வழக்கமாயிருந்தது. ஜனங்கள் விகாரைக்குச் செல்லும் போதும், அங்கிருந்து திரும்பும்போதும் அவர்கள் தன்னைக் கவனிக்கும்படியாகவே அவள் நடப்பது வழக்கம். தன்னைக் கேட்டவர்களிடம், அவள் தான் பகவர் புத்தருடன் இரவில் தங்கிவிட்டுக் காலையில் திரும்புவதாகக் கூறி வந்தாள். புஷ்பம் முதலிய அவளுடைய அலங்காரங்களைக் கண்டு பல ஜனங்கள் அவளுடைய கூற்று உண்மையாயிருக்கலாம் என்று எண்ணினார்கள்.

பல மாதங்களாகச் சுந்தரி செய்துவந்த சூழ்ச்சியால், நகரெங்கணும் அவளைப்பற்றியும் ஐயனைப்பற்றியுமே பேசப்பட்டு வந்தது. அந்நிலையில் ஒரு நாள் காலை சுந்தரி கொலை செய்யப் பெற்று, அவள் பிரேதம் ஜேதவன விகாரைக்கு வெளியே குப்பை மேட்டில் கிடந்தது. பகவருக்கும் சுந்தரிக்குமுள்ள தீய நட்பைப் பற்றி மக்கள் அனைவரும் பேசி வந்ததால், அதை மறைப்பதற்காகப் பௌத்த பிக்குக்களே அவளைக் கொலை செய்துவிட்டதாக பகவரின் எதிரிகள் எங்கும் செய்தியைப் பரப்பி, மன்னரிடமும் முறையிட்டுக் கொண்டார்கள்.

சில நாட்களுக்குப்பின் உண்மைக் கொலைஞர் இருவர் அரசாங்க அதிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டனர். ஒரு கள்ளுக்கடையில் அந்த இருவரும் தாங்கள் சுந்தரியைக் கொலை செய்ததைப் பற்றி மது வெறியில் பேசிக் கொண்டிருந்ததால் உண்மை வெளிப்பட்டுவிட்டது. அரசரின் விசாரணையின் போது, பகவரின் மீது அவதூறு உண்டாக்கும் வண்ணம் சுந்தரி-