பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334 ⚫ போதி மாதவன்

அவர் இல்லாத காலத்தில் கௌசாம்பியில் பிக்குக்களிடையே மனவேற்றுமைகள் வளர்ந்து சண்டைகள் முற்றி விட்டன. அப்பொழுது பௌத்த சமயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பிக்குக்கள் சீரழிவதைக் கண்டு, அவர்களுக்கு உதவி புரிவதை அறவே நிறுத்திக்கொண்டனர். அவர்கள் பிக்குக்களைக் கண்டால் வணங்குவதைக்கூட நிறுத்தி விட்டனர். இவர்கள் சீவர உடைக்கே உரியவரல்லர்; ஒன்று இவர்கள் பெருமானைத் திருப்தி செய்ய வேண்டும்; அல்லது இல்வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்!’ என்று அவர்கள் கூறினார்கள்.

இதன் பிறகுதான் பிக்குக்களுக்கு நல்லறிவு உண்டாயிற்று. பகவரை அடைந்து தங்களுக்குள் சமாதானம் செய்து வைக்கும்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று இரு கட்சியார்களும் சிராவஸ்திக்குச் சென்றனர். அவர்கள் வரவை அறிந்த சாரீபுத்திரர் அண்ணலிடம் சென்று, அவர்களிடம் தாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டார்.

அப்போது பகவர், ‘சாரீபுத்திர! இருதிறத்தாரையும் கண்டிக்க வேண்டாம்;. கடுஞ் சொற்கள் எவர்க்கும் இனிமை பயப்பதில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் தனியாக இருக்க இடமளித்து, இருபக்கத்தாரையும் சமமாக நடத்தவும். இரு கட்சியார்கள் சொல்வதையும் பொறுமை யோடு கேட்கவேண்டும். பிறகு சங்கம் முடிவு செய்து ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும்’ என்று கூறினார்.

அதேபோலத் தம்மிடம் ஆலோசனை கேட்டு வந்த கௌதமிக்கும், உபாலிக்கும் ஐயன் பதிலுரைத்தார். இரு கட்சியினருக்கும் வேற்றுமை இன்றி உணவு, உடைகள் எல்லாம் அளித்து வரும்படி கௌதமிக்குக் கூறப்பட்டது. உபாலி, சண்டையின் விவரத்தை மீண்டும் விசாரிக்காமலே சமாதானம் செய்யலாமா என்று கேட்டதற்கு,