பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 335

அது உண்மையான சமாதானமாகாது என்று ஐயன் கூறினார்.

பிக்குக்கள் யாவரும் பெருமானிடம் நேரில் வந்த போது, அவர் முற்காலத்தில் கோசல மன்னனுடைய மைந்தன் தீர்க்காயு என்பவன் தன் பெற்றோரைக் கொன்ற காசி அரசனைப் பழிக்குப் பழி வாங்காமல் மன்னித்துப் பொறுமையை மேற்கொண்ட வரலாற்றை விளக்கிச் சொன்னார். பிறகு, ‘சகோதரர்களே! தரும சம்பந்தமாக நீங்கள் என் பிள்ளைகள். தந்தை கூறிய போதனையை மைந்தர்கள் காலால் மிதித்துத் தள்ளுதல் தகாது; இது முதல் என் போதனைப்படி நடவுங்கள்!’ என்று கூறினார்.

இதற்கு அப்பால் பிக்குக்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்து, தங்கள் பிணக்குகளைத் தீர்த்துக் கொண்டனர். சங்கத்தில் மீண்டும் ஒற்றுமை நிலைநிறுத்தப்பெற்றது.

காசி பாரத்துவாஜர்

புத்தர் போதியடைந்த பதினோராம் ஆண்டில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சி அவர் காசி பாரத்துவாஜரைச் சந்தித்துத் தரும உபதேசம் செய்ததாகும்.

இராஜகிருகத்தின் அருகே எகனாலா என்ற கிராமத்திலுள்ள தட்சிணகிரி விகாரையில் புத்தர் பெருமான் தங்கியிருக்கையில், அங்கே காசி பாரத்துவாஜர் என்ற செல்வம் மிகுந்த பிராமணர் ஒரு நன்னாளில் நடுகை விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அன்று 500 ஏர்களும், 1000 எருதுகளும் தயாராகப் பூட்டி நிறுத்தப் பெற்றிருந்தன. 500 உழவர்களும் ஆடை ஆபரணங்களுடன் தங்களை அலங்கரித்துக் கொண்டு நின்றனர்; காளைகளின் கழுத்துக்களிலும் மலர் மாலைகள் விளங்கின. ஆயிரக்கணக்கான ஜனங்களும் வேடிக்கை