பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336 ⚫ போதி மாதவன்

பார்க்கக் கூடியிருந்தனர். வந்தவர்களுக்கெல்லாம் உணவளிப்பதற்காகப் பாரத்துவாஜரின் மனைவி வண்டி வண்டியாக உணவு வகைகள் தயாரித்து வயல்களுக்குக் கொண்டு வந்திருந்தாள். பாரத்துவாஜர் யார் யாருக்கு என்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொருவராகக் குறித்துக் காட்டவும், அவர் மனைவி அவ்வாறே அன்னத்தையும் பண்டங்களையும் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அன்று காலையில் புத்தர் பெருமான், ‘இன்று யாருக்குத் தரும உபதேசம் செய்யலாம்?’ என்று எண்ணிப் பார்க்கையில், தவமகிமையுள்ள பாரத்துவாஜரை நடுகை விழாவிலே சந்திக்க வேண்டும் என்று திருவுளம் கொண்டு, அவ்வாறே விழா நடந்த இடத்திற்குச் சென்றிருந்தார். அன்ன தானம் நடந்து கொண்டிருந்தது. ஐயன் கையிலே திருவோட்டுடன் சிறிது தூரத்திற்கு அப்பால் மௌனமாக நின்று கொண்டிருந்தார். பாரத்துவாஜரும் அவர் நிற்பதைக் கண்டு கொண்டார். உணவு அருந்திய ஜனங்கள் அருள் வள்ளலின் திருமுகவிலாசத்தைக் கண்டு அவர் பக்கமாகச் சென்று கூடியிருந்தனர்.

பாரத்துவாஜர் ஐயனைப் பார்த்து வெறுப்புற்று, ‘சிரமணரே! நீர் ஏன் பிச்சை கேட்க வருகிறீர்? நான் நிலத்தை உழுது, விதை விதைத்து, அறுவடை செய்வதால் தானியம் கிடைக்கின்றது; அதை நான் அனுபவிக்கிறேன். துறவியாகிய நீரும் இதுபோல உழுது பயிரிட்டால், உமக்கும் உண்ண உணவு கிடைக்கும்!’ என்று கூறினார்.

அமலர், ‘ஓ அந்தண! நானும் உழுகிறேன், விதைக்கிறேன், பிறகுதான் உண்கிறேன்!’ என்று பதிலுரைத்தார். அந்தணரின் அஞ்ஞானம் நீங்கும் தருணம் வந்து விட்டதை அவர் அகத்திலே உணர்ந்து கொண்டார்.