பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 337

‘ஏருமில்லை, எருதுகளுமில்லை! இந்தத் துறவி உழுது பயிர் செய்வதாகச் சொல்கிறாரே! ஆனால், இவருடைய உடலின் ஒளியைப் பார்த்தால், இவர் பொய்யும் புகல மாட்டார் என்று தெரிகின்றது!’ என்று எண்ணிய பிராமணர், ‘கோதமரே! நீர் உழுவதாகச் சொல்லிக் கொண்டால், எவரும் நீர் உழுவதைக் கண்டதில்லையே! உமது கலப்பை எங்கே? கருவிகள் எங்கே?’ என்று கேட்டார்.

‘ஓ பிராமணரே, கேளும்!’ என்று பெருமான் பேச ஆரம்பித்தார்.

‘தருமமே எனது நிலம். வாழ்க்கையைப் பற்றி யிருக்கும் ஆசை என்னும் களைகள் அதில் உண்டாவதை நான் களைந்தெறிகிறேன். ஞானம் என்பது என் கலப்பை; கருத்துடைமை எனது தார்க்கோல். விடா முயற்சி என்ற எருதுகள் ஏரை இழுத்துச் செல்கின்றன. (மெய்ப்பொருளை உணரும்) தெளிவான காட்சிகளே நான் விதைக்கும் விதைகள். நல்லொழுக்கமே நான் பாய்ச்சும் நீர். எனது அறுவடை எது தெரியுமா? என்றும் அழிவில்லாத நிர்வாண அமிழ்தம். இந்த விளைவைப் பெறுகிறவர்களுக்கு என்றென்றும் குறைவேயில்லை’[1]

பாரத்துவாஜர் உடனே மாமுனியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். ‘அருமை, அருமை, அருமையான உபதேசம், என் குருவே!’ என்று பாராட்டினார்.

பின்னர் அவர், ‘தவறி எறியப்பட்டதை மீட்டும் எடுத்துக் கொடுப்பது போலவும், மறைத்து வைக்கப்பட்டதைத் தெரியும்படி காட்டி வைப்பது போலவும், வழி தவறிச் செல்வோனுக்குச் சரியான மார்க்கத்தைக்


  1. இந்த விவரம் ‘சுத்த நிபாதம், காசி பாரத்வாஜ சூத்திர’த்திலுள்ளது.