பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 ⚫ போதி மாதவன்

நாடுவாரில்லையென்றும், ஆசைகளின் காரணமாகப் பொருள் சேர்ப்பார் எவருமில்லை யென்றும், செல்வஞ் சேர்ப்பதற்காகச் சமயச் சடங்குகளை மேற்கொள்ளவோர் எவருமில்லை யென்றும், மதத்தின் பெயரால் உயிர்ப்பிராணிகளுக்கு ஊறு செய்வார் எவருமில்லை யென்றும் புகழ்பெற்ற ‘புத்தசரிதை'க் காவியத்தின் ஆசிரியரான அசுவகோஷர் வர்ருணித்துள்ளார்.

புத்தர் பெருமான் தமது அவதாரத்தைப் பற்றிப் பிற் காலத்தில் தம் சீடர்களுக்கு உரைத்த சில வாக்கியங் களைப் பார்த்தால், உலகை உய்விக்கவே அவர் தோன்றி ளாரென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும்.

‘ஓ பிக்குகளே! மாநில மக்களிடம் கொண்ட அன்பினாலே, அவர்களுடைய இன்பத்திற்காகவும், நலனுக்காகவும், தேவர்கள் மனிதர்களின் இன்பத்திற்காகவும், நலனுக்காகவும், ஒப்பற்ற ஒருவர் தோன்றுகிறார்.

‘இந்த ஒப்பற்ற ஒருவர் யார்? இவரே பூரண ஞான மடைந்து உயர்நிலை அடைந்துள்ள ததாகதர் ஆவார்.

‘அறிவு ஆற்றல்களினாலே ஒப்பற்ற ஒருவர் இவ்வுலகிலே அவதரித்திருக்கிறார். இந்த ஒப்பற்ற ஒருவர் யார்? இவரே பூரண ஞானமடைந்து உயர் நிலை அடைந்துள்ள ததாகதர் ஆவார்.’

-அங்குத்தர நிகாயம்