பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342 ⚫ போதி மாதவன்

பிக்குவும் தாமே தொண்டராக இருக்க விரும்புவதைத் தெரிவித்துக்கொண்டனர். ஆனால், ஐயன் அவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. அப்போது ஆனந்தர் மட்டும் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். மற்றைப் பிக்குக்கள் அவரைத் தூண்டி, அவர் மனத்திலுள்ளதை வெளியிட்டுக் கூறும்படி வேண்டினார்கள். ஆனந்தர் சில நிபந்தனைகளின் பேரிலேயே தாம் தொண்டராக இருக்க முடியும் என்றார். பகவருக்கு அளிக்கப்பெறும் உணவு, உடை, ஆசனம், மரியாதைகள் முதலியவைகளைப் பகவர் தமக்கு அளிக்கக்கூடாது என்றும், தாம் அழைத்துவரும் அன்பர்களுக்கு ஐயன் தரிசனமளிக்க வேண்டும் என்றும், தம்மைத் திருத்தி நல்வாழ்வில் நிலைத்திருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டியது பெருமானின் பொறுப்பு என்றும். தாம் இல்லாத வேளைகளில் பகவர் மற்றவர்களுக்குக் கூறும் உபதேசங்களைத் தமக்கும் பின்னால் போதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார். பகவர் மிக்க மகிழ்ச்சியுடன் அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, ஆனந்தரையே அணுக்கத் தொண்டராக நியமித்தார்.

அப்போது ஆனந்தர் துறவியாகி இருபது ஆண்டுகள் சென்றிருந்தன. அதிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் அவர் அருள் வள்ளலுடன் இடைவிடாது தங்கியிருந்து அருந்தொண்டாற்றி வந்தார். பெருமானுக்கும் அவரிடம் அளவற்ற அன்பு இருந்து வந்தது.

அங்குலிமாலன்

புத்தர் சிராவஸ்தியில் தங்கியிருந்த சமயத்தில், ஒரு நாள் காலையில், அன்று யாருக்கு உபதேசம் செய்யலாம் என்று ஆலோசனை செய்யும்போது. அங்குலிமாலன் என்ற கொள்ளைக்காரனின் நினைவு வந்தது. அன்று அவனை நிச்சயமாக ஆட்கொள்ளவேண்டும் . என்று அவருக்கு அருள் பிறந்தது.