பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352 ⚫ போதி மாதவன்

புதிய அரசன் அஜாதசத்துரு அவனுக்குத் தனி விகாரை ஒன்றைக் கட்டிக் கொடுத்தான். ஐந்நூறு சீடர்களும் சேர்ந்தனர். அவர்களுக்கு அரண்மனையிலிருந்து நாள் தோறும் வண்டி வண்டியாக உணவும், மற்றைப் பொருள்களும் சென்று கொண்டிருந்தன.

சிறையிலே அடைக்கப் பெற்றிருந்த மன்னருக்கு உணவும் மறுக்கப்பட்டது. மகாராணி மட்டும் தினந்தோறும் அவரைச் சந்தித்து வந்தாள். அவள் சந்திக்கும் நேரத்தில் இரகசியமாகக் கொஞ்சம் உணவு கொண்டு போய்க் கொடுத்து வந்தாள். அதையறிந்த மன்னர் அவள் செல்வதையும் தடுத்துவிட்டான். ஆயினும் பிம்பிசாரர் சிறைக்கோட்டத்திலே கவலையில்லாமல் காலங்கழித்து வந்தார். உணவில்லாமல் உடல் தேய்ந்துகொண்டிருந்தும், அவர் உள்ளம் நிறைவு பெற்றிருந்தது. ஏனெனில், சிறையி லிருந்து கொண்டே அவர் போதி வேந்தரை ஒவ்வொரு நாள் மாலையிலும் தரிசிக்க முடிந்தது. அவர் அடைக்கப் பெற்றிருந்த அறையில் ஒரு சாளரம் இருந்தது. அதன் வழியாகப் பார்த்தால் கிருத்திரகூடம்.[1] என்ற மலை தெரியும் அங்கேயும் ஒரு விகாரை இருந்தது. பகவர் மாலை நேரத்தில் விகாரையிலிருந்து வெளிவந்து மலை மீது ஏறிச்செல்வது வழக்கம். அவர் நோக்கம் பிம்பிசாரருக்குக் காட்சியளிக்க வேண்டும் என்பதே. புத்த தரிசனம் ஒன்றே தமக்குப் போதுமானது என்று பிம்பிசாரர் ஆறுதல் கொண்டிருந்தார்.

இதை அறிந்த அஜாதசத்துரு சிறையிலிருந்த சாளரத்தையும் அடைத்துவிடுமாறு உத்தரவிட்டான். ஒருநாள் பகவர் மௌத்கல்யாயனரைப் பிம்பிசாரரிடம் அனுப்பி யிருந்தார். மௌத்கல்யாயனர் தமது இருத்தி ஆற்றலால்


  1. கிருத்திர கூடம்– கழுகுக் குன்றம், அல்லது கழுகு மலை.