பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவதத்தனும் அஜாசத்துருவும் ⚫ 350

உருண்டு செல்வது போல் அது முழக்கம் செய்து கொண்டு வீதிகளிலே ஓடிக் கொண்டிருந்தது ஜனங்கள் வீடுகளை அடைத்து விட்டு மாடிகளிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். விவரம் தெரியாமல் தெருக்களில் நடந்து வந்த மக்களிற் பலர் யானையால் மிதிக்கப் பெற்று உயிர் துறந்தனர். தேவதத்தன் உயர்ந்த மாடி. ஒன்றில் நின்ற வண்ணம் ஐயன் வரவை எதிர்பார்த்திருந்தான்.

புத்தரும் பிக்குக்களும் வீதிகளின் வழியாக நடந்து வந்தனர். மாடிகளிலே நின்ற மக்கள் அவர்கள் திரும்பச் செல்லும்படி கூக்குரலிட்டுக் கூவினர். பெருமான் எதையும் பொருட்படுத்தாமலே அமைதியோடு சென்று கொண்டிருந்தார். வழியிலே யானைக்குப் பலியானவர்களின் பிணங்கள் நசுங்கிக் கிடந்தன. திடீரென்று இரத்தின பாலன் பகவருடைய கூட்டத்தை நோக்கி ஆவேசத்துடன் ஓடி வந்தது. பெருமானைச் சூழ்ந்து சென்று கொண்டிருந்த பிக்குக்கள் நாலு பக்கங்களிலும் சிதறி ஓடிவிட்டனர்; பலர் ஆகாயத்திலே பறந்து சென்றதாகவும் சொல்லப்படுவதுண்டு. அணுக்கத் தொண்டர் ஆனந்தர் ஒருவர் மட்டுமே, ஐயனின் நிழலைப் போலே அவரைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.

வீதிகளும், வீடுகளும் அதிரும்படி பாய்ந்து வந்த வேழத்தை நோக்கிப் பெருமான் எதிர்கொண்டு சென்றார். அவரைக் கண்டதும் யானை, மண் மீது மலை சாய்வதுபோல், அவர் பாதத்தடியில் வீழ்ந்து வணங்கியது. ஐயன் அதனைப் பார்த்து, ‘இன்று முதலே உன் வெறி, மயக்கம், கோபம் முதலியவற்றை ஒழித்து விடு! துக்கச் சேற்றில் நீ அழுந்தியது போதும்! இப்போதே நீ தீமைகளைக் கைவிடாவிட்டால், உன் பாவ மூட்டை மேலும் மேலும் பெருகிக் கொண்டேயிருக்கும்!’ என்று உபதேசம் செய்தார். மதயானையின் இதயம் சாந்தி பெற்றது. இக்காட்சியைக் கண்டுகொண்டிருந்த ஜனங்கள்