பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360 ⚫ போதி மாதவன்

கூறினான். அந்தக் கூட்டத்திலே நின்று கொண்டிருந்த ஜீவகர் மட்டும் வாய் திறந்து பேசவேயில்லை. ஏனெனில், அவர் ஆலோசனை சொல்வதானால், புத்தரிடம் செல்ல வேண்டும் என்றே கூறுவார்; ஆனால் பெருமானிடம் மன்னனுக்குப் பகைமை இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பற்றிக் கூறுகையில், தாமும் பெருமானின் பெயரைச் சொல்லிக் குழப்பத்தை அதிகப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கருதியிருந்தார். ஆனால் அரசன் அவரைப் பார்த்து, ‘மற்றவர்கள் தத்தம் குருமார்களைப் பற்றி கூறுகையில் நீ மட்டும் மௌனமாயிருப்பதன் காரணம் என்ன? உனக்கு ஏதாவது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறதா?’ என்று வினவினார். அப்போது ஜீவகர், சமயம் வந்துவிட்டது என்பதை அறிந்து பேசலானார். போதிமாதவரின் பெருமைகளை எடுத்துச் சொல்லி ‘அநேகர் வணங்கி ஏத்தவும், பல்லாயிரவர் உபதேசம் கேட்கவும், அந்தக் கருணை வள்ளல் எனது மாந்தோப்பிலுள்ள விகாரையிலேயே இப்போது அமர்ந்திருக்கிறார்; அவரை நாம் போய்த் தரிசித்தல் நலம்!’ என்றார்

புத்தர் பால் பற்றுடையவர்களிடத்திலே அஜாதசத் துருவுக்கு எப்போதுமே சந்தேகம் உண்டு. ஏனெனில் பெருமானுக்கு அவன் அத்தனை தீங்குகள் செய்திருந்தான். ஆகவே, அவன் ஜீவகரிடத்தில் உண்மையைச் சொல்லும்படி கேட்டான். ‘என்னை ஏமாற்றவில்லையே? எதிரிகளிடம் என்னைக் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சி எதுவும் இல்லையே? என் உயிருக்கு ஆபத்தில்லையே?’ என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டான். எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று ஜீவிகர் பதிலுரைத்தார். ஆயினும் தாங்கள் தனித்துச் செல்லாமல் தக்க பாது காப்புடனும், பெரும் கூட்டமான ஜனங்களுடனும் செல்வது நலம்’ என்றும் அவர் யோசனை கூறினார். எவரேனும் பகைவர் மறைந்திருந்து மன்னனுக்குத் தீங்கிழைத்தாலும், அந்தப் பழி தம்மையே சாரும் என்று