பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவதத்தனும் அஜாசத்துருவும் ⚫ 363

நிக்கிராந்தர், காத்தியாயனர் முதலிய சமயத் தலைவர்களிடம் முன்னால் தான் கேட்டதாகவும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகப் பதிலுரைத்ததாகவும், எதுவும் தனக்குத் திருப்தியளிக்கவில்லை என்பதாகவும் கூறினான்.

பகவர் அவனுடைய கேள்விக்குப் பதிலாகத் தாமும் அவனை ஒரு கேள்வி கேட்க விரும்பினார்: ‘மகாராஜா! உங்களிடம் ஓர் அடிமை இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவன் தன் விருப்பம்போல நடக்க முடியாது; தனக்கு என்று அவனுக்கு எவ்வித இன்பமும் கிடையாது; ஏவிய பணிகளைச் செய்வதே அவன் கடமை. அத்தகைய ஏவலாளன் தங்கள் அரண்மனையையும், அதிலே தாங்கள் உலகத்தில் அனுபவிக்க வேண்டிய செல்வங்களும் இன்பங் களும் நிறைந்திருப்பதையும் பார்த்து, ஒரு சமயம் இப்படி எண்ணக்கூடும்: “மகத மன்னரான வைதேகி புத்திரர் அஜாதசத்துருவும் ஒரு மனிதரே; நானும் மனிதனே! ஆனால் அஜாதசத்துரு, பூர்வ ஜன்மங்களின் புண்ணிய வசத்தால், இப்போது அரண்மனையில் வசித்து, மனிதர் அடையமுடியாத இன்பங்களையெல்லாம் துய்த்துக் கொண்டிருக்கிறார். நானும் நற்கருமங்களை மேற்கொண்டு புண்ணியத்தைத் தேடி அவரைப்போல் ஆக முடியும். நான் என் தலைமயிரையும் தாடியையும் மழித்து விட்டுக் காவியுடை அணிந்து, வீட்டு வாழ்க்கையைத் துறந்து துறவியாகிவிடுவேன்!”

‘அவன் எண்ணியபடியே துறவு பூண்டு, உயிர்க் கொலை புரிதல், களவு காமம், வேடிக்கை, விளையாட்டுக்கள், நிந்தனை, பேராசை, புறங்கூறுதல், பிறருக்குத் தீங்கு நினைத்தல் முதலிய பாவ கருமங்களையெல்லாம் விட்டொழித்துவிடுகிறான். அவனைத் தங்கள் அதிகாரிகள் கண்டுவந்து தங்களிடம் அறிவிப்பார்கள். அப்போது தாங்கள் என்ன செய்வீர்கள்? அந்தத் துறவியைப் பிடித்து வரச்சொல்லி, அவன் மறுபடி உங்கள் அடிமையாகவும்,