பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372 ⚫ போதி மாதவன்

தியானம், அற்பமான பயன்களைக் கருதிப் பேரின்ப லட்சியத்தைக் கைவிடாமை, ‘நான்’ எனும் அகங்காரத்தை ஒழித்தல், சுய நலங்களை அறவே மறத்தல், உயர்ந்த புனிதமான சிந்தனைகளை வளர்த்தல், நிருவாண நிலையின் மேம்பாடு ஆகிய பல பொருள்களைக் குறித்தும் அப்போது அவர் விளக்கியுரைத்தார்.

கழுகுக் குன்றில் அவர் சீடர்களுக்குச் செய்த உபதேசங்களிலும், பின்னால் யாத்திரையில் பல இடங்களிலே ஆற்றிய சொற்பொழிவுகளிலும், பெருமான் ஒரு முக்கியமான கருத்தைத் திரும்பத் திரும்பக் கூறி வந்ததாகக் குறிக்கப் பெற்றுள்ளது. அந்த உயரிய உபதேசம் வருமாறு:

‘நேர்மையான ஒழுக்கத்தை ஆதாரமாய்க் கொண்டு, சிந்தையை ஒருநிலைப்படுத்தும் சமாதியால் (தியானத்தால்) விளையும் பயன் பெரிது; மகத்தானது. சமாதியை ஆதாரமாய்க் கொண்டு அடையும் ஞானத்தால் விளையும் பயன் பெரிது; மகத்தானது. ஞானத்தால் செம்மையுற்ற உள்ளம் புலன்களின் ஆசைகளிலிருந்தும், “நான்” என்ற அகங்காரத்திலிருந்தும், மயக்கம், அறியாமைகளிலிருந்தும் விடுதலை பெறுகின்றது.’

பிக்குக்கள் நிறைந்த நம்பிக்கையோடு இருக்கவேண்டும்; அவர்கள் இதயத்தில் அடக்கம் நிலைபெற வேண்டும்; பாவத்திற்கு அவர்கள் அஞ்சி ஒதுங்கவேண்டும்; அவர்கள் கல்வி நிறைந்திருக்கவேண்டும்; ஆற்றல் பெறவேண்டும்; உள்ளங்கள் அசைவிலா ஊக்கத்தோடு இருக்கவேண்டும்; அவர்கள் பூரண ஞானம் பெறவேண்டும்–இந்த ஏழு விதிகளின்படி அவர்கள் நடந்து வந்தால்தான் பிக்குக்கள் அழிவுப் பாதையைவிட்டு வளர்ச்சிபெற்று வாழ்வார்கள் என்பதை ஐயன் அவர்கள் மனத்தில் பசுமரத்து ஆணி போல் பதிய வைத்தார்.